11-வது சட்டசபை தேர்தல் கண்ணோட்டம்

கர்நாடக சட்டசபைக்கு நடந்த 11-வது தேர்தல் குறித்து இங்கு காண்போம்.

Update: 2023-04-08 21:00 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையின் 11-வது தேர்தல் 6-10-1999 அன்று நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்), ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதா, அ.தி.மு.க உள்பட 22-க்கும் மேற்பட்ட கட்சிகள் களம் கண்டன. மேலும் சுயேச்சைகளும் மல்லுக்கட்டினர். இதற்கு முந்தைய 1994-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்தது. அந்த தேர்தலில் ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி செய்தது. ஆனால் அக்கட்சியில் ஏற்பட்ட பிளவால் ஜனதாதளம் (எஸ்) மற்றும் ஐக்கிய ஜனதாதளம் என பிரிந்தன. இதன் எதிரொலி 1999-ம் ஆண்டு தேர்தலில் எதிரொலித்தது. அதாவது அந்த இரு கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்தன. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது.

இந்த தேர்தலுக்கு முன்பாகவே ஜனதாதளம் கட்சிக்குள் உருவான கோஷ்டிகளால் கட்சி 2-ஆக உடைந்தது. தேவேகவுடா தலைமையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும், ஜே.கே.பட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் ஜனதாதளம்(யு) கட்சியும் இந்த தேர்தலில் கோதாவில் குதித்தன. ஜனதாதளம் (எஸ்) கட்சி 203 தொகுதிகளிலும், ஜனதாதளம்(யு) கட்சி 112 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 222 இடங்களிலும், பா.ஜனதா 149 இடங்களிலும், அ.தி.மு.க. 13 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின. அதேபோல் இந்திய கம்யூனிஸ்டு 8 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 10 இடங்களிலும் போட்டியிட்டன. சுயேச்சைகள் 476 பேரும் போட்டியிட்டனர். இதில் 1,279 ஆண் வேட்பாளர்களும், 62 பெண் வேட்பாளர்களும் என மொத்தம் 1,341 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 3 கோடியே 42 லட்சத்து 84 ஆயிரத்து 98 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு கோடியே 74 லட்சத்து 47 ஆயிரத்து 578 ஆண்களும், ஒரு கோடியே 68 லட்சத்து 36 ஆயிரத்து 520 பெண்களும் அடங்குவர். மாநிலம் முழுவதும் மொத்தம் 44 ஆயிரத்து 497 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 67.65 சதவீத வாக்குகள் பதிவானது. அதாவது ஒரு கோடியே 23 லட்சத்து 21 ஆயிரத்து 745 ஆண்களும், ஒரு கோடியே 8 லட்சத்து 72 ஆயிரத்து 538 பெண்களும் என மொத்தம் 2 கோடியே 31 லட்சத்து 94 ஆயிரத்து 283 வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர்.

இந்த தேர்தலில் ஜனதாதளம் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜனதாதளம் (எஸ்), ஜனதாதளம் (யு) கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்தன. காங்கிரஸ் கட்சி 132 தொகுதிகளில் வெற்றிக்கொடி நாட்டி 5 ஆண்டுக்கு பிறகு கர்நாடக விதான சவுதாவில் ஆட்சி அரியணையில் ஏறியது. பா.ஜனதா கட்சி 44 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 10 இடங்களிலும், ஜனதாதளம் (யு) 18 இடங்களிலும், சுயேச்சைகள் 19 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில் 218 ஆண் வேட்பாளர்களும், 6 பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். 44 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. எதிர்க்கட்சி தலைவராக எடியூரப்பா செயல்பட்டார்.

132 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியாக அக்கட்சியின் மாநில தலைவராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார். அவர் 1999-ம் ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி பதவி ஏற்றார். அவரது ஆட்சியில் பெங்களூருவின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். முன்னாள் முதல்-மந்திரி தேவராஜ் அர்சுக்கு பிறகு கர்நாடகத்தில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த பெருமை எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கிடைத்தது. அவரது பதவிக்காலம் 2004-ம் ஆண்டு மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்தது.

கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்

இந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் பின்வருமாறு:-

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 222 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 132 இடங்களில் அக்கட்சி வெற்றிக்கனியை ருசித்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட 8 பேர் டெபாசிட் இழந்தனர். இக்கட்சிக்கு 90 லட்சத்து 77 ஆயிரத்து 815 வாக்குகள் கிடைத்தது. இது 41.15 சதவீதமாகும்.

பா.ஜனதா கட்சி 149 இடங்களில் போட்டியிட்டது. இதில் அக்கட்சியை சேர்ந்த 44 பேர் வெற்றி பெற்றனர். 37 பேர் டெபாசிட்டை பறிகொடுத்தனர். இக்கட்சி 45 லட்சத்து 98 ஆயிரத்து 741 வாக்குகள் பெற்றிருந்தது. இது 30.90 சதவீதமாகும்.

மொத்தம் 203 இடங்களில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் 10 இடத்தில் மட்டுமே அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற முடிந்தது. மேலும் 148 வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைக்காமல் போனது. இக்கட்சிக்கு 23 லட்சத்து 16 ஆயிரத்து 885 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இது 11.45 சதவீதமாகும். 

Tags:    

மேலும் செய்திகள்