பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்துவது பற்றி அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷனர் ஆலோசனை- வரைவு வாக்காளர் பட்டியல் 25-ந் தேதி வெளியீடு
பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்துவது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினார். அப்போது வரைவு வாக்காளர் பட்டியலை வருகிற 25-ந் தேதி வெளியிடும்படி தெரிவித்தார்.
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்துவது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினார். அப்போது வரைவு வாக்காளர் பட்டியலை வருகிற 25-ந் தேதி வெளியிடும்படி தெரிவித்தார்.
பெங்களூரு மாநகராட்சி தேர்தல்
ஆனால் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து மாநகராட்சி தேர்தலை நடத்த அரசுக்கு உத்தரவிடும்படி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தேர்தலை விரைவில் நடத்தும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, மாநகராட்சியின் வார்டுகள் 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை பட்டியல் மற்றும் இடஒதுக்கீடு பட்டியலும் வெளியாகி உள்ளது. இதற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டு இருக்கிறது.
இதையடுத்து, மாநகராட்சி தேர்தலை நடத்துவது குறித்து நேற்று மாநில தேர்தல் ஆணையத்தின் கமிஷனர் பசவராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை
அப்போது வார்டு மறுசீரமைப்பு, இடஒதுக்கீடு பட்டியல் குறித்தும், மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கமிஷனர் பசவராஜ் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக தற்போது உள்ள வாக்காளர் பட்டியலுடன், புதிய வாக்காளர்களையும் சேர்ந்து, புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஒவ்வொரு வார்டாக...
தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும், வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் பசவராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு 198 வார்டுகளாக இருந்த மாநகராட்சி, தற்போது 243 வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாலும், புதிதாக இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாலும், ஒவ்வொரு வார்டுமே புதிதாகவே இருக்கும். அதற்கு ஏற்றார் போல் வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, பசவராஜ் உத்தரவிட்டு இருக்கிறார்.
25-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்
ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும் போது, பெங்களூருவில் மட்டும் வாக்கு சதவீதம் குறைவாக இருக்கிறது. எனவே மாநகராட்சி தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அடுத்த மாதம் 22-ந் தேதிக்குள் புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், அதற்கு முன்பாக வருகிற 25-ந் தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும்.
அன்றைய தினம் (வருகிற 25-ந் தேதி) வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று பசவராஜ் உத்தரவிட்டு இருக்கிறார்.