கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மனைவி சென்ற ஹெலிகாப்டரில் திடீர் சோதனை
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மனைவி சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன், பைலட் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு நேற்று கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமாரின் மனைவி உஷா, மகள், மருமகன் ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்றனர்.
'பைலட்' வாக்குவாதம்
அவர்களது ஹெலிகாப்டர் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த ஹெலிகாப்டரில் சோதனை நடத்த முயன்றனர்.
அப்போது அந்த ஹெலிகாப்டரின் பைலட் ராமதாஸ் என்பவர், இது தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர். இது தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தவில்லை எனக் கூறி சோதனை நடத்த கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதனால் அவருக்கும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சோதனை
பின்னர், தேர்தல் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் அங்குலம், அங்குலமாக சோதனையிட்டனர். மேலும் டி.கே.சிவக்குமாரின் குடும்பத்தினரின் உடைமைகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அதாவது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் எடுத்துவரப்பட்டதா என இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் பணம் உள்ளிட்ட எதுவும் சிக்கவில்லை.
அதுபோல் ஹெலிபேடு மைதானத்தில் இருந்துடி.கே.சிவக்குமாரின் குடும்பத்தினர் தர்மஸ்தலா செல்வதற்காக வந்த காரிலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கனவே டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய பா.ஜனதாவினர் சதி செய்ததாகவும், தற்போது அவரது குடும்பத்தினர் சென்ற ஹெலிகாப்டர், காரில் சோதனை நடத்தி பா.ஜனதா அரசு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் காங்கிரசார் குற்றம்சாட்டியுள்ளனர்.