பெங்களூரு ரெயில் நிலையத்தில் அசாமில் இருந்து கடத்திய ரூ.80 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்

பெங்களூரு ரெயில் நிலையத்தில் அசாமில் இருந்து கடத்திய ரூ.80 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-20 22:33 GMT

பெங்களூரு: அசாமில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய ரூ.80 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திரிபுராவை சேர்ந்த 3 பேர் கைது

பெங்களூருவுக்கு வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெங்களூரு பையப்பனஹள்ளி எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த 3 பேர் சந்தேகப்படும்படியாக சுற்றியதால், அவர்களை பிடித்து சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அவர்களிடம், கஞ்சா, ஆசிஸ் ஆயில் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். கைதான 3 பேரும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பபத் கரே, பின்டோ தாஸ், ராஜேஸ் தாஸ் என்று தெரிந்தது. இவர்கள் அசாமில் உள்ள ரெயில்வே துறையில் ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். அசாமில் குறைந்த விலைக்கு கஞ்சா, பிற போதைப்பொருட்களை விலைக்கு வாங்கி உள்ளனர்.

ரூ.80 லட்சம் போதைப்பொருட்கள்

அந்த போதைப்பொருட்கள் ரெயில் மூலமாக பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளனர். 3 பேரும் ரெயிலில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றியதால், அவர்களுக்காக ரெயில் பெட்டிகளில் வழங்கப்பட்டு இருந்த லாக்கர்களில் போதைப்பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

கைதான நபர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 1 கிலோ 10 கிராம் ஆசிஸ் ஆயில், 4 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும். கைதான 3 பேர் மீதும் பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்