கேரள கடற்பகுதியில் சிக்கிய போதைப்பொருளின் மதிப்பு: 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கைப்பற்றியதை விட அதிகம் - அமித்ஷா தகவல்

கேரள கடற்பகுதியில் சிக்கிய போதைப்பொருளின் மதிப்பு, 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கைப்பற்றியதை விட அதிகம் என்று அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2023-05-20 20:27 GMT

கோப்புப்படம்

துவாரகா,

கேரள கடற்பகுதியில் சமீபத்தில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுமார் 2,500 கிலோ மெதாம்பெட்டமைன் போதைப்பொருள் சிக்கியது.

இந்த மிகப்பெரிய வேட்டை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதம் வெளியிட்டு உள்ளார். குஜராத்தின் துவாரகா மாவட்டத்துக்கு உட்பட்ட ஓகாவில் தேசிய கடலோர காவல் துறையின் நிரந்தர வளாகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் இதை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'கேரள கடற்பகுதியில் சமீபத்தில் ரூ.12 ஆயிரம் கோடி போதைப்பொருள் சிக்கியது. இது கடந்த ஆண்டுகளில் முழுவதும் பிடிபட்டதை விட அதிகம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளில், ரூ.680 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் ரூ.12,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை ஒரே நேரத்தில் பிடித்துள்ளோம். பாதுகாப்பு சூழ்நிலை மேம்பட்டுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது' என பெருமிதம் வெளியிட்டார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கடலோர பாதுகாப்பில் குறைபாடு இருந்ததால்தான் மும்பை தாக்குதல் நடந்ததாக தெரிவித்த அமித்ஷா, ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியில் உள்நாட்டிலும், எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலமாக இருப்பதாக நிபுணர்களே ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்