சிவ்ராஜ் பாட்டீல் மருமகள் அர்ச்சனா பா.ஜ.க.வில் இணைந்தார்

மராட்டிய மாநிலத்தின் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் அர்ச்சனா பாட்டீல் பா.ஜ.க.வில் இணைந்தார்.

Update: 2024-03-30 09:52 GMT

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேவேளை பல கட்சி உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சி மாறியும், தங்களது பதவியை ராஜினாமா செய்வதுமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சிவ்ராஜ் பாட்டீல் மருமகள் அர்ச்சனா பாட்டீல் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். மராட்டிய மாநிலத்தின் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் அர்ச்சனா பா.ஜ.க.வில் இணைந்தார்.

மராட்டிய மாநிலத்தின் உட்கிர் பகுதியில் இயங்கி வரும் லைப்கேர் மருத்துவமனையின் தலைவரான அர்ச்சனா பாட்டீலின் கணவர் ஷைலேஷ் பாட்டீல், மராட்டிய மாநில காங்கிரஸ் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அர்ச்சனா பாட்டீல் கூறுகையில், "அரசியலில் பணியாற்றுவதற்காக பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடி கொண்டு வந்த நாரி சக்தி வந்தன் ஆதினியம் சட்டத்தை நான் பெரிதும் கவர்ந்தது. இது பெண்களுக்கு சமமான வாய்ப்பை வழங்குகிறது" என்றார்.

அர்ச்சனா பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மக்களவை சபாநாயகரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சிவ்ராஜ் பாட்டீலின் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சனா பாட்டீல் பா.ஜ.க.வில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகப் பெரிய விஷயம். இது கட்சியை மேலும் பலப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்