மந்திரி மாதுசாமியின் கருத்துக்கு தவறான அர்த்தம் கற்பிக்க வேண்டாம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் ஆட்சி நிர்வாகம் நடைபெறவில்லை என்று கூறிய மந்திரி மாதுசாமியின் கருத்துக்கு தவறான அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
மந்திரிகள் கடும் எதிர்ப்பு
சட்டத்துறை மந்திரி மாதுசாமி சமூக ஆர்வலர் ஒருவருடன் நடத்திய உரையாடல் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் மாதுசாமி, ''கர்நாடகத்தில் தற்போது ஆட்சி நிர்வாகம் நடைபெறவில்லை. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் தான் உள்ளது. நாங்கள் 'மேனேஜ்' செய்து கொண்டிருக்கிறோம், அவ்வளவு தான். நான் சொன்ன ஒரு பணியையே கூட்டுறவு மந்திரி எஸ்.டி.சோமசேகர் செய்து கொடுக்கவில்லை. என்ன செய்வது'' என்று கூறியுள்ளார்.
மாதுசாமியின் இந்த கருத்துக்கு சக மந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோட்டக்கலை துறை மந்திரி முனிரத்னா, மாதுசாமி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தவறான அர்த்தம்
மந்திரி மாதுசாமியின் கருத்து குறித்து அவரிடம் பேசினேன். அவர் வேறு அர்த்தத்தில் கருத்து கூறியுள்ளார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதனால் மாதுசாமியின் கருத்துக்கு தவறான அர்த்தம் கற்பிக்க வேண்டாம். 3 மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு துறை தொடர்பான நிகழ்ச்சியில் அந்த கருத்தை மாதுசாமி பேசியுள்ளார். எனது தலைமையிலான பா.ஜனதா அரசு சரியான முறையில் செயல்பட்டு வருகிறது. எந்த பிரச்சினையும் இல்லை. சிவமொக்கா சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. சட்டப்படி தீவிரமான முறையில் விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போலீசார் தங்களின் கடமையை சட்டத்திற்கு உட்பட்டு செய்வார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.