உங்கள் பெற்றோர் எனக்கு ஓட்டு போடவில்லை என்றால்... பள்ளி குழந்தைகளிடம் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்த ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2024-02-11 07:58 GMT

image courtesy; PTI

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர்,  பெற்றோர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால், 2 நாட்களுக்கு குழந்தைகளை சாப்பிட வேண்டாம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்த ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

களம்நூரி தொகுதி எம்.எல்.ஏ.-வான சந்தோஷ் பாங்கர் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிக்குச் சென்றபோது அங்குள்ள பள்ளி மாணவர்களிடம் "அடுத்த தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், இரண்டு நாட்களுக்கு சாப்பிட வேண்டாம்" என்று கூறுவதுபோல் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலானது.

அந்த வீடியோவில் 10 வயதுக்கும் குறைவான மாணவர்களிடம், அவர்கள் சாப்பிட மறுப்பதற்கான காரணம் குறித்து பெற்றோர்கள் கேள்வி கேட்டால், "சந்தோஷ் பாங்கருக்கு வாக்களியுங்கள், அப்போதுதான் நாங்கள் சாப்பிடுவோம்" என்று பதில் சொல்லுங்கள் என்று பாங்கர் கூறுவதுபோல் உள்ளது.

பாங்கரின் இந்த கருத்துகள் காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி  தலைவர்களை அவர் மீது நடவடிக்கை எடுக்க தூண்டியுள்ளது.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறுகையில், "பாங்கர் பள்ளிக் குழந்தைகளிடம் கூறியது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிரானது. எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பாங்கருக்கு இதுபோன்ற சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர், கடந்த மாதம், 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வராவிட்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு பண்டிகை பேரணியின்போது வாளைக் காட்டி மிரட்டியதாக களம்நூரி காவல் நிலைய போலீசரால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் 2022-ம் ஆண்டில், தொழிலாளர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கேட்டரிங் மேலாளரை அவர் அறைந்த வீடியோ வைரலானது.

Tags:    

மேலும் செய்திகள்