அய்யப்ப பக்தர்களுடன் 300 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த நாய்

சபரிமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில் அய்யப்ப பக்தர்களுடன் 300 கிலோ மீட்டர் தூரம் நாய் ஒன்று நடந்து வந்துள்ளது. அது தங்களை பாதுகாப்பதாக பக்தர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர்.

Update: 2022-11-30 18:45 GMT

மங்களூரு:

சபரிமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில் அய்யப்ப பக்தர்களுடன் 300 கிலோ மீட்டர் தூரம் நாய் ஒன்று நடந்து வந்துள்ளது. அது தங்களை பாதுகாப்பதாக பக்தர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர்.

அய்யப்ப பக்தர்கள்

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகண்ணா. இவரது உறவினர்கள் மஞ்சு மற்றும் ரவி. இவர்கள் 3 பேரும் சபரிமலைக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்ல முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்வாரில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினர். அவர்கள் சிறிது தூரம் நடந்து வந்த நிலையில், அவர்களுடன் ஒரு தெருநாயும் சேர்ந்து நடக்க தொடங்கியது. அதை அவர்கள் விரட்டியும் அது எங்கும் ஓடவில்லை. இவர்களுடனேயே பயணித்து வந்தது.

அவர்கள் தார்வாரில் இருந்து பட்கல் வரை நடந்து வந்துள்ளனர். அவர்களுடனேயே அந்த நாயும் நடந்து வந்திருக்கிறது. அவர்கள் தாங்கள், சாப்பிடும் உணவையே அந்த நாய்க்கும் கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் உணவை தின்றுவிட்டு அவர்களுடன் அந்த நாய் பாதயாத்திரையாக வருகிறதாம்.

300 கிலோ மீட்டர் தூரம்...

இதுபற்றி நாகண்ணா கூறுகையில், 'நாங்கள் வீட்டில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையை தொடங்கிய சிறிது தூரத்திலேயே எங்களுடன் சேர்ந்து இந்த நாய் நடக்க ஆரம்பித்துவிட்டது. இதுவரை நாங்கள் 300 கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்போம். தற்போது பட்கலை தாண்டி உடுப்பி நோக்கி நடக்கிறோம். தொடர்ந்து இந்த நாய் எங்களுடன் நடந்து வருகிறது. எங்களை பாதுகாத்து வருகிறது. இது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது.

இது வளர்ப்பு நாயா? அல்லது தெருநாயா? என்பது தெரியவில்லை. சபரிமலையை சென்றடைய இன்னும் 800 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டி உள்ளது. கோவிலை சென்றடையும் வரை இந்த நாய் எங்களுடன் வருமா?, அப்படி மீறி வந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?, மீண்டும் அதை எங்கள் வீட்டுக்கு அழைத்து செல்லலாமா? என்று பல்வேறு யோசனைகள் இப்போதே எனக்கு வந்துவிட்டன' என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்