மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேச வேண்டாம்: உமர் அப்துல்லா எச்சரிக்கை
பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினால் எதிர்க்கட்சிகளுக்கே எதிராக முடியும் என தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள 'இந்தியா ' கூட்டணியில் தேசியமாநாட்டு கட்சி இணைந்துள்ளது.தற்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், "மோடிக்கு குடும்பமில்லை" என்று தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருந்தார். இதுகுறித்து உமர் அப்துல்லா கூறியதாவது:-
இத்தகைய கோஷங்களை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அதனால் நமக்கு எத்தகைய பலனும் இல்லை. உண்மையில் இதுபோன்ற கோஷங்கள் எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறது. மோடியின் சொந்த வாழ்க்கையை தாக்கி பேசி, வழிமறிக்க ஆளில்லாத கோல் போஸ்டை அவருக்கு கொடுத்துவிட்டோம். அதை சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டின் 140 கோடி மக்கள் தனது குடும்பம் என்று பதிலடி கொடுத்துவிட்டார். இப்போது நம்மிடம் அதற்குப் பதில் இல்லையே" என்றார்.