மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து டி.கே.சிவக்குமார் சர்ச்சை கருத்து

மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் பா.ஜனதாவினர் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை கொண்டு வந்தனர் என்று டி.கே.சிவக்குமார் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியுள்ளார்.

Update: 2022-12-15 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசியல் அமைப்பு

ஜனநாயகத்தில் சட்டசபை, அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் எதிர்க்கட்சி ஆகியவை நான்கு தூண்களாக உள்ளன. இதில் ஒரு தூண் சரிந்தாலும் அது மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். நாம் குறிப்பிட்ட மதங்களை சேர்ந்தவராக இருந்தாலும், அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி வாழ முடியாது.

ஆனால் அந்த அரசியல் அமைப்புக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை நாம் பாதுகாக்க வேண்டும். நாங்கள் மக்களின் வாழ்க்கையை பாதுகாக்க போராடுகிறோம். ஆனால் பா.ஜனதா மக்களின் உணர்வுகள் முன்வைத்து அரசியல் செய்கிறது. இந்த பா.ஜனதா அரசின் ஊழல்கள் குறித்த செய்திகள் ஊடகங்களில் தினந்தோறும் வருகின்றன.

சரியாக தூங்கவில்லை

அதை வைத்தே சட்டசபையில் பேச முடியும். நான் கட்சியின் மாநில தலைவராக இருப்பதால் சட்டசபை கூட்டத்தில் என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. நான் கட்சி தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஒரு நாள் கூட சரியாக தூங்கவில்லை. கட்சியை பலப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன். எங்கள் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா மற்றும் எனக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன.

ஆனால் ஆளும் பா.ஜனதால் கோஷ்டி பிரச்சினை உள்ளது குறித்து பேசுவது இல்லை. காங்கிரசில் முதல்-மந்திரி யார் என்பது குறித்தே பா.ஜனதா தலைவர்கள் அதிகம் பேசுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் காங்கிரசின் வெற்றியை ஒப்பு கொண்டுள்ளனர் என்று அர்த்தம். மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து மற்றும் பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த அரசு பயப்படுவது ஏன்?.

ஊழல் அதிகரித்துவிட்டது

உள்ளாட்சி தேர்தல் குறித்து நாங்கள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். இதற்காக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் அதிக ஊழியர்களை பணி நியமனம் செய்தோம். அதில் எந்த தவறுகளும் நடக்கவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த அரசுக்கு இதை விட ஒரு அவமானம் வேறு ஒன்று இல்லை. கொரோனா காலத்தில் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. கர்நாடக அரசு ரூ.1,800 கோடிக்கு உதவிகளை வழங்குவதாக கூறியது. இதனார் பயனடைந்தவர்கள் யார் என்பதை மத்திய-மாநில அரசுகள் கூறவில்லை. தற்போது வாக்காளர் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரசுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளனர். இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா முயற்சி செய்கிறது.

குக்கர் குண்டு

மக்களின் கவனத்தை திசை திருப்ப மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை கொண்டு வந்தனர். பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்?. போலீஸ் டி.ஜி.பி. அவசர கதியில் அது பயங்கரவாத செயல் என்று அறிவித்தார். மக்களின் கவனத்தை திசை திருப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஆகும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்