டெல்லி சென்றடைந்த டி.கே. சிவக்குமார்; அடுத்த முதல்-மந்திரி பற்றி முடிவு செய்ய கட்சி மேலிடத்துடன் பேச்சுவார்த்தை

டெல்லிக்கு சென்றடைந்த டி.கே. சிவக்குமார், அடுத்த முதல்-மந்திரி பற்றி கட்சி மேலிடத்துடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

Update: 2023-05-16 09:03 GMT

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆட்சியமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை மேற்கொண்டு இறுதி அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி உள்ளது.

அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்க உள்ளது.  இதனை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா டெல்லிக்கு நேற்று மதியம் புறப்பட்டு சென்றார். அவர் நேற்றிரவு டெல்லியை சென்றடைந்து உள்ளார்.

இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவர், நான் டெல்லிக்கு போக விரும்பினேன். ஆனால், எனக்கு சில சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றார்.

காங்கிரஸ் மேலிடம், என்னையும், சித்தராமையாவையும் டெல்லி வரும்படி அழைத்து உள்ளது. சோனியா காந்தி மற்றும் கார்கே எனக்கு தலைவர் பதவியை வழங்கினார்கள். எனது தலைமையிலேயே 135 சீட்டுகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது என்று நேற்று முதலில் கூறும்போது குறிப்பிட்டார். எனினும், முதல்-மந்திரி முடிவை கட்சியின் மேலிடத்திடம் விட்டு விட்டேன் என்று கூறினார்.

இந்த நிலையில், அவர் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சி விரும்பினால் அவர்கள் எனக்கு பொறுப்பை வழங்கலாம். எங்களுடையது ஒற்றுமையான ஒரு வீடு. எங்களுடைய எண்ணிக்கை 135. யாரையும் பிரிக்க நான் விரும்பவில்லை.

அவர்கள் என்னை விரும்புகிறார்களோ அல்லது இல்லையோ, நான் பொறுப்புள்ள நபர். நான் மிரட்டமாட்டேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இன்று மதியம் அவர் டெல்லி வந்தடைந்து உள்ளார். இதன்பின், கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரியை முடிவு செய்யும் கட்சியின் தலைமையுடனான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்