பீகாரில் அவலம்: படித்து கொண்டே வீடு, வீடாக சாராய வினியோகம்; ஏழை மாணவர்களை பயன்படுத்தும் கும்பல்

பீகாரில் ஏழை மாணவர்களை பயன்படுத்தி ஆர்டரின் பேரில் வீடு, வீடாக சென்று சாராயம் வினியோகிப்பதில் கும்பல் ஈடுபடுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Update: 2022-12-21 10:28 GMT



பாட்னா,


பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசராய் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பார்வையும் பறிபோயுள்ளது.

பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. பீகாரில், சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக கடுமையான கொள்கையை அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தி, அதனை கடைப்பிடித்தும் வருகிறது. முதல்-மந்திரி நிதீஷ் குமார் உத்தரவின் பேரில் மாநிலத்தில் மதுபான தடை அமலில் உள்ளது.

அதிக அளவில் பலர் பலியான நிலையில், இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. விரிவான அறிக்கையை அளிக்கும்படி அரசையும் கேட்டு கொண்டுள்ளது.

போலீசாரின் எப்.ஐ.ஆர். பதிவு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டால் அதுபற்றிய தகவல்களை அளிக்கும்படியும் ஆணையம் கேட்டு கொண்டது. இதனை தொடர்ந்து, 9 பேர் கொண்ட ஆணைய உறுப்பினர்கள் நேற்று முதல் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தொடர்ந்து, சாராய விற்பனையை தடுக்க போலீசாருக்கும் கடுமையான உத்தரவுகளை அரசு பிறப்பித்தது. குடோனில் பதுக்கிய 8 ஆயிரம் லிட்டர் மதுபானம் நேற்று போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

எனினும், ஆளும் கட்சி உறுப்பினர்களே சட்டவிரோத மதுபான உற்பத்தி ஆலைகளுடன் தொடர்பில் உள்ளனர் என்று பா.ஜ.க. தொடர்ந்து அதிரடியான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஹாஜிப்பூர் நகர பகுதிகளில் மதுபான பாட்டில்கள் வீடு, வீடாக சென்று வினியோம் செய்யப்படுகிறது என கலால் துறைக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதில், சோன்பூர் பகுதியில் இருந்து 25 மதுபான பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக கல்லூரி மாணவர் ஒருவர் பெற்றுள்ளார். அவற்றை வீடுகளுக்கு வினியோகிக்க புறப்பட தயாரானார். அவரை, செல்லும் வழியில் கலால் துறை அதிகாரிகள் மறித்து சோதனையிட்டனர்.

இதில், மதுபான பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவரிடம் நடந்த விசாரணையில், வைஷாலி மாவட்டத்தின் சோன்பூர் பகுதியை சேர்ந்த அசுதோஷ் ராஜ் என தெரிய வந்தது.

அவர் ஸ்கூட்டி வண்டியில் முன்பக்கத்தில் மதுபான பாக்கெட்டுகளை வைத்து கொண்டு, வீடுகளுக்கு சென்று அவற்றை வினியோகித்து வந்துள்ளார். அவரிடம் கூடவே, ஒரு சிறிய பையும், அதில் புத்தகங்களும் இருந்துள்ளன.

இதுபற்றி கலால் துறை காவல் ஆய்வாளர் அஜித் குமார் மற்றும் அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததில், கல்வி செலவுகளுக்கு ஏற்ற அளவுக்கு நிதிவசதி இல்லை. பாட்னா நகரில் பயிற்சி மையம் ஒன்றில் வகுப்புகளுக்கு சென்று வருகிறேன்.

பீகார் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு தயாராகி வருகிறேன். பட்டப்படிப்பையும் அதனுடன் தொடர்ந்து வருகிறேன் என அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

சில தவறான நபர்களுடன் ஏற்பட்ட தொடர்பினை அடுத்து, வீடுகளுக்கு சென்று சாராயம் வினியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற படிக்கும் மாணவர்களை பயன்படுத்தி, சாராய விற்பனையில் ஈடுபடும் கும்பலை தேடி வருகிறோம் என காவல் ஆய்வாளர் அஜித் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்