'மக்களின் ஆரோக்கியத்திற்கு யோகா மிக முக்கியம்'; சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பேச்சு

மக்களின் ஆரோக்கியத்திற்கு யோகா மிக முக்கியமானது என்று சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பேசினார்.

Update: 2023-06-21 21:14 GMT

பெங்களூரு:

மக்களின் ஆரோக்கியத்திற்கு யோகா மிக முக்கியமானது என்று சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பேசினார்.

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று நடைபெற்ற 9-வது உலக யோகா தினத்தில் பங்கேற்று சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:-

ஆரோக்கியத்திற்கு முக்கியமானது

யோகா நமது நாட்டின் கலாசாரம் ஆகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது முன்னோர்கள் இந்த உலகத்திற்கே யோகாவை அளித்து விட்டு சென்றிருந்தனர். தினமும் நாம் யோகா செய்வதன் மூலமாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். மனரீதியான பிரச்சினைகளை சரி செய்வதில் யோகா மிகவும் முக்கியமாகும். மக்களின் ஆரோக்கியத்திற்கு யோகா மிக முக்கியமானது.

தினமும் யோகா செய்வதன் மூலமாக நமது உடல் நலம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கும். தற்போதைய காலத்தில் புற்றுநோய், இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை ஆகும். யார் ஒருவர் தவறாமல் யோகா செய்கிறார்களோ? அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

தினமும் ஒரு மணிநேரம் பயிற்சி

பல ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டின் பண்பாடு, கலாசாரத்தில் ஒன்றாக யோகா இருந்து வருகிறது. இந்த உலகுக்கே யோகாவை அளித்த பெருமை நமது நாட்டுக்கு உள்ளது. தற்போது உலக நாடுகளில் யோகா பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு கிடைத்திருக்கிறது. தற்போது நம்மில் இருக்கும் உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, புதிது புதிதாக உருவாகும் நோய்கள், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நமக்கு யோகா மிகவும் அவசியமானதாகும்.

கர்நாடகத்தில் யோகாவுக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள யோகா செய்வது அவசியமாகும். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபணமாகி உள்ளது. இதற்காக தான் மாநிலத்தில் 7 ஆயிரத்து 270 மையங்களில் தினமும் ஒரு மணிநேரம் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்