திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் 40 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதியில் நேற்று 73,323 பேர் தரிசனம் செய்தனர்.

Update: 2022-11-13 07:25 GMT

திருப்பதி,

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வார இறுதி விடுமுறையான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை கொண்டுவரப்பட்டதால் நேற்று முன்தினம் இரவு டைம் ஸ்லாட் டோக்கன் பெறுவதற்காக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர்.

நேற்று காலை வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதையடுத்து சுமார் இரண்டு கி.மீ. தூரம் சி.என்.சி. அலுவலகம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டு உள்ளனர். நேற்று முன்தினம் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 40 மணி நேரத்திற்கு மேலாக தரிசனம் செய்ய முடியாமல் காத்துக் கொண்டு உள்ளனர்.

திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் குளிர் காற்று வீசுகிறது. இதனால் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர். டைம் ஸ்லாட் முறையில் டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 15 மணி நேரமும், ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 73,323 பேர் தரிசனம் செய்தனர். 41,041 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.20 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

 

Tags:    

மேலும் செய்திகள்