காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்த விவரங்கள் ராகுல்காந்திக்கு அனுப்பப்படும் - பசவராஜ் பொம்மை

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்த விவரங்கள் ராகுல் காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-16 13:46 GMT

மாண்டியா,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கர்நாடக மாநிலம் பல்லாரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவில் பணி நியமனங்களில் ஊழல் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விவரங்கள் ராகுல் காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "அவர் (ராகுல்காந்தி) தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு சரியாக விளக்கம் அளிக்கவில்லை. பணிநியமனங்களில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழலை போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடந்ததில்லை.

இங்கு செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, போலீஸ், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

எனவே, பல்கலைக் கழகப் படிப்பு (பியுசி) வினாத்தாள் கசிவு ஊழல் உள்ளிட்ட அனைத்து வழக்குகளின் விவரங்களையும் புள்ளிவிவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் ராகுல்காந்திக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன். அவரது கட்சி ஆட்சியின் போது எவ்வளவு ஊழல் நடைபெற்றது என்பதை அவர் பார்க்கட்டும். பிறகு பேசலாம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியதற்கு பதிலளித்த அவர், 2018 தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்று நூற்றுக்கு நூறு சதவீதம் கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற இடங்கள் 127-ல் இருந்து 79-ஆக குறைந்து விட்டது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்