மக்களவையை தொடர்ந்து டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட டெல்லி நிர்வாக மசோதா, நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

Update: 2023-08-07 19:29 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்துக்கு சிபாரிசு செய்ய ஒரு ஆணையம் அமைக் கவும், இந்த விவகாரத்தில் கவர்னருக்கு இறுதி அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் மசோதா ஒன்றை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இந்த டெல்லி நிர்வாக மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று பிற்பகலில் பலத்த அமளிக்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார்.

பின்னர் மசோதா மீது காரசார விவாதம் நடந்தது. காங்கிரஸ் எம்.பி. அபிஷேக்சிங்வி, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். டெல்லி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும், கூட்டாட்சி முறையை மீறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், பா.ஜனதா எம்.பி. சுதன்சு திரிவேதி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். அதிகாரிகள் நியமனத்தில் ஆம் ஆத்மி அரசு முறைகேடுகள் செய்ததால், மசோதா கொண்டுவர வேண்டியதாகி விட்டது என்று அவர் கூறினார்.

ப.சிதம்பரம்

காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

பா.ஜனதா இந்த மசோதாவை ஆதரிப்பது புரிந்தபோதிலும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதாதள நண்பர்கள் ஆதரிப்பது எனக்கு புரியவில்லை. இது ஒரு அரசியல் சட்ட விரோத மசோதா. மத்திய சட்ட அமைச்சகத்துக்கே இது தெரியும்.

இந்த மசோதா, மத்திய அரசுக்கு பலத்த தோல்வியையே அளிக்கும். டெல்லியில், தேர்ந்தெடுக்ப்பட்ட அரசு இருக்கும்போது, இம்மசோதாவுக்கு என்ன அவசியம்? இதை நிறைவேற்ற அரசியல்சட்டரீதியாக அதிகாரமோ, தார்மீக உரிமையோ கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் அத்துமீறல்

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசியதாவது:-

ஜனநாயக உணர்வையும், அரசியல்சட்டத்தையும் இந்த மசோதா மீறுவதாக அமைந்துள்ளது.

எந்த மாநில அரசும் சுயமாக இயங்க மத்திய அரசு அனுமதிப்பது இல்லை. மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பது இல்லை. ஒன்று, மத்திய அரசு அத்துமீறுகிறது. அல்லது, மத்திய அரசு சார்பில் கவர்னர் அத்துமீறுகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மசோதா நிறைவேறியது

இந்த மசோதா அரசியல் சட்டப்படி, செல்லுபடியாகக்கூடியது என சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசினார்.

மசோதா மீது நடந்த இந்த காரசாரமான விவாதம் இரவு வரை நீடித்தது. பின்னர் விவாதம் நிறைவடைந்த பின் இரவில் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதில் மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிர்த்து 102 வாக்குகளும் பதிவாகி இருந்தன. அதன்படி மசோதா நிறைவேறியது.

இடைநீக்கம் வாபஸ்

முன்னதாக மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியவுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடங்கினர். மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதிக்கக்கோரி கூச்சலிட்டனர்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் நடந்த கூட்டு கற்பழிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

அமளிக்கிடையே, காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக்ராவ் பட்டீல் மீதான இடைநீக்கத்தை திரும்ப பெறுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி 10-ந் தேதி, பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சபை நடவடிக்கைகளை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

அவர் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற உரிமைக்குழு சிபாரிசின்பேரில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், அமளி காரணமாக, பிற்பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

கோஷம் போட வருகையா?

இதற்கிடையே மக்களவை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிபோது கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருந்தது.

ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று, மணிப்பூரில் இன்னும் வன்முறை நடந்து வருவதாகவும், அப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடி சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

அதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா, ''கேள்வி நேரம் நடத்தப்படுவதை நீங்கள் விரும்பவில்லையா? மக்களவை, கோஷம் போடும் இடமல்ல. கோஷம் போடுவதற்குத்தான் இங்கு வருகிறீர்களா?'' என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களை பார்த்து கேட்டார்.

இருப்பினும், அமளி தொடர்ந்ததால், சபையை பகல் 12 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இணையதளத்துக்கு வெளிநாட்டு நிதி

பகல் 12 மணிக்கு சபை கூடியபோது, பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே, ஒரு புதிய பிரச்சினையை எழுப்பினார்.

அவர் கூறியதாவது:-

'நியூஸ்கிளிக்' என்ற இணையதளம், வெளிநாட்டில் இருந்து ரூ.38 கோடி நிதி பெற்றுள்ளது. இந்திய விரோத சூழ்நிலையை உருவாக்க அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

'நியூஸ்கிளிக்' இணையதளம், இந்திய விரோத குழுக்களில் இடம் பெற்றுள்ளது. ரூ.38 கோடி நிதியால் பலன் அடைந்தவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த 2005-ம் ஆண்டுக்கும், 2014-ம் ஆண்டுக்கும் இடையே காங்கிரஸ் கட்சிக்கு சீனா பணம் கொடுத்தது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி, நாட்டை பிளவுபடுத்த விரும்புகிறது.

இவ்வாறு அவர் பேசியபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, 4 மாதங்களுக்கு பிறகு எம்.பி. ஆன ராகுல்காந்தி, சபையில் இருந்தார்.

காங்கிரஸ் எம்.பி.க்களின் கூச்சல்-குழப்பத்தால், சபாநாயகர் இருக்கையில் இருந்த கிரித் சோலங்கி, சபையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்தார்.

குரல் வாக்கெடுப்பு

பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, மின்னணு தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் பிரச்சினையை எழுப்பி கூச்சலிட்டபடி இருந்தனர்.

அவர்களுக்கு தனிநபர் தகவல் பாதுகாப்பில் அக்கறை இல்லை என்று அஸ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டினார். பின்னர், அம்மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தனிநபர்களின் மின்னணு தகவல்களை தவறாக பயன்படுத்தினாலோ, பாதுகாக்க தவறினாலோ, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்க இம்மசோதா வகை செய்கிறது.

அறக்கட்டளை மசோதா நிறைவேறியது

மக்களவையில், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இயற்கை அறிவியல், என்ஜினீயரிங், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் புவி அறிவியலில் ஆராய்ச்சிக்காக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்க இம்மசோதா வழி வகுக்கிறது.

விவாதத்தின் மீது பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திரசிங், ''விண்வெளி துறையை தனியாருக்கு திறந்துவிட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

மத்தியஸ்த மசோதா

மக்களவையில், மத்தியஸ்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. வணிகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணவும், மத்தியஸ்தத்துக்கு சட்ட அந்தஸ்து அளிக்கவும் இம்மசோதா வகை செய்கிறது.

ஒப்புக்கொள்ளப்பட்ட மத்தியஸ்த தீர்வை எந்த தரப்பாவது மீறினால், தண்டனை அளிப்பதற்கும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீன்வளர்ப்பு மசோதா

மக்களவையில், கடலோர மீன்வளர்ப்பு ஆணைய திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

கடலோர மீன்வளர்ப்பு செயல்பாடுகளின்போது செய்யப்படும் குற்றச்செயல்களை குற்றப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இம்மசோதா வழி வகுக்கிறது. இதன்மூலம், 3 ஆண்டு வரை சிறை தண்டனை, ரூ.1 லட்சம் வரை அபராதம் போன்ற தண்டனைகள் ரத்து செய்யப்படும்.

இது, மீனவர்களுக்கு ஆதரவான மசோதா என்று மத்திய மந்திரி புருஷோத்தம் கே.ருபாலா விளக்கம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்