கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்தது தொடர்பாக டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு

டெல்லியில் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து டெல்லி அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-09-14 11:50 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வந்தார். இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனாலும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, சிபிஐ வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. அதில், கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான கெஜ்ரிவாலை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் அவரது வீட்டின் வெளியே பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிலையில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரை வரவேற்க வடக்கு டெல்லி சிவில் லைன்சில் உள்ள முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு வெளியே பட்டாசு வெடித்தது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, வரும் குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் டெல்லியில் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து டெல்லி அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்