டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு; துணை நிலை குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி எம்.பி. பெயரும் சேர்ப்பு

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா பெயரையும் துணை நிலை குற்றப்பத்திரிகையில் அமலாக்க துறை சேர்த்து உள்ளது.

Update: 2023-05-02 08:57 GMT

புதுடெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு கூறப்பட்ட, டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா, சி.பி.ஐ. அலுவலகத்தில் அதிகாரிகளின் 8 மணி நேர நேரடி விசாரணைக்கு பின் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி இரவில் கைது செய்யப்பட்டார்.

அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தும், பின்னர் அதனை தொடர்ச்சியாக நீட்டித்தும் உத்தரவிட்டது. இதனால், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், சிசோடியாவிடம் டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி பற்றி அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 9-ந்தேதி விசாரணை நடத்தினர். அதற்கு இரு நாட்களுக்கு முன்பும் இதேபோன்று விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக அமலாக்க துறையும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமலாக்க துறையின் விசாரணை காவல் கடந்த ஏப்ரல் 29-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவரை கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பலத்த பாதுகாப்புடன் அவர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அமலாக்க துறை வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 8-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா பெயரையும் துணை நிலை குற்றப்பத்திரிகையில் அமலாக்க துறை சேர்த்து உள்ளது. இதுபற்றி சிசோடியாவின் முன்னாள் செயலாளரான சி. அரவிந்த் விசாரணை அமைப்பிடம் கூறும்போது, டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் இல்லத்தில், கூட்டம் ஒன்று நடந்தது. அதில், ராகவ் சத்தாவும் கலந்து கொண்டார் என கூறியுள்ளார்.

அமலாக்க துறையின் அந்த அறிக்கையில், டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் இல்லத்தில், ராகவ் சத்தா, பஞ்சாப் அரசின் கலால் வரி ஆணையாளர் வருண் ரூஜம் மற்றும் பஞ்சாப் கலால் துறையை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கின்றது. அவரது பெயர் உள்ளபோதும், வழக்கில் ஒரு குற்றவாளியாக அவர் குறிப்பிடப்படவில்லை. சமீபத்தில் நடிகை பரிணீதி சோப்ராவுடன், ராகவ் சத்தாவுக்கு நிச்சயம் செய்யப்பட்டு முடிவானது.

அவர்கள் இருவரும் வருகிற அக்டோபரில் திருமணம் செய்ய உள்ளனர் என்று ஒரு தகவல் வெளியானது. எனினும், இந்த மே மாதத்திலேயே அவர்களது திருமணம் நடைபெற கூடும் என்று மற்றொரு செய்தியும் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், ராகவ் அளித்து உள்ள விளக்கத்தில், எனது பெயர் குற்றவாளியாகவோ அல்லது சந்தேகத்திற்குரிய நபராகவோ அமலாக்க துறை தாக்கல் செய்த எந்த புகார்களிலும் குறிப்பிடப்படவில்லை என மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்