டெல்லி: ஹமாசால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பொதுமக்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்திய இஸ்ரேல்..!!

அக்டோபர் 7-ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ காட்சிகளை இஸ்ரேலிய தூதரகம் வெளியிட்டது.

Update: 2023-11-01 23:00 GMT

புதுடெல்லி,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த மாதம் 7-ந் தேதி போர் வெடித்தது. 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா.வும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பல குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியாகவில்லை.

அதே சமயம் ஜபாலியா அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் கடந்த மாதம் 7-ந் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் மத்திய படை பிரிவின் தளபதி இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அவருடன் ஹமாஸ் அமைப்பினர் சுமார் 50 கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்ரஹிம் பியாரி வீழ்த்தப்படவில்லை என்று ஹமாஸ் கூறுகிறது. அதுமட்டும் இன்றி, இஸ்ரேல் போலி செய்தியை பரப்புவதாகவும், ஹமாஸ் அழிப்பு போர்வையில் அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது என்றும் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஹமாசால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பொதுமக்களின் புகைப்படங்களை இஸ்ரேல் தூதரகம் காட்சிப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 7-ம் தேதி 2,000-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் காசா பகுதிக்குள் கடத்தப்பட்டனர். அவர்களின் இருப்பிடம் இன்னும் கண்டறிப்படவில்லை.

மேலும் இந்த போரில் 9 மாதங்கள் முதல் 80 வயது வரையிலான 3,000 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள், ஹமாசால் காயமடைந்து, கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம், இந்திய பத்திரிகையாளர்களுக்கான தொலைக்காட்சி திரையிடலில், அக்டோபர் 7-ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின் பயங்கரமான மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்