டெல்லி: வாக்குவாதம் முற்றி தந்தை, மகன் குத்திக்கொலை

ஜெய் பகவான் மற்றும் அவருடைய மகனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது.

Update: 2024-03-11 04:26 GMT

புதுடெல்லி,

டெல்லியின் சிராக் நகரில் குமார் சவுக் பகுதியில் வசித்து வந்தவர் ஜெய் பகவான் (வயது 55). இவருடைய மகன் சுபம் (வயது 22). இருவரும் கேபிள் பணியாளர்களாக இருந்து வந்தனர்.

இவர்களின் அண்டை வீட்டாருக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் இவர்கள் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஜெய் பவகான் மற்றும் அவருடைய மகன் இருவரையும் 4 முதல் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது.

இதுபற்றி தெற்கு டெல்லியின் துணை காவல் ஆணையாளர் அங்கித் சவுகான் கூறும்போது, போலீசாருக்கு இரவு 8 மணியளவில் தொலைபேசி வழியே பேசிய நபர் அவருடைய தந்தையை சிலர் கத்தியால் குத்தி விட்டனர் என கூறினார். சம்பவ பகுதிக்கு சென்றபோது, இரண்டு பேரும் குத்தி கொல்லப்பட்டு கிடந்தனர்.

இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்த பகவானுக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, செயின் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகி உள்ளன என கூறியுள்ளார். தடய அறிவியல் நிபுணர் குழு ஒன்று அந்த பகுதியில் ஆய்வு செய்து சென்றுள்ளது. பகைமையால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் நடந்துள்ளது என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

பகவானின் குடும்பத்தினர் கூறும்போது, இதற்கு முன் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டின் மேல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பல புகார்கள் அளித்தும் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிவித்தனர். சம்பவம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்