அரசு அனுமதி மறுத்த போதும் மணிப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால்..!
அரசு அனுமதி மறுத்த போதும் மணிப்பூருக்கு மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் புறப்பட்டுச் சென்றார்.;
டெல்லி,
மணிப்பூரில் 2பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ நாட்டையே அதிர வைத்தது. அந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவலும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இன்று மணிப்பூருக்குச் சென்று வரும்30 வரை அங்கேயே தங்கி இருந்து, பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார். தனது வருகை குறித்து முன்கூட்டியே மணிப்பூர் மாநில அரசுக்கு தெரிவித்த பின்னர் பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தார். எனினும் அவரது வருகைக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்தது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"நான் மணிப்பூருக்கு செல்வதாக இருந்த நிலையில் அம்மாநில அரசு திடீரென்று எனக்கு அனுமதி மறுத்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேச நான் ஏற்கனவே எனது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டேன். ஏன் என்னை நிறுத்த முயற்சிக்கிறார்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் திட்டமிட்டபடி மணிப்பூர் செல்வதாக ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். "நான் மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன், என்னைத் தடுக்காமல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களைச் சந்திக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்." என அவர் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் இன்று டெல்லியில் இருந்து மணிப்பூர் புறப்பட்டு சென்றார்.