அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

அமலாக்கத்துறை கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து,அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Update: 2024-04-10 04:23 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தான் கைது செய்யப்பட்டதையும், அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டதையும் சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலில் பிரசாரம் செய்வதை தடுக்கவே தான் கைது செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

அதற்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தலை சுட்டிக்காட்டி, கைதில் இருந்து கெஜ்ரிவால் விலக்கு கோர முடியாது என்றும், சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும் கூறப்பட்டு இருந்தது. இம்மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுவர்ண காந்தா சர்மா அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார்.

தன்னை தொடர்ந்து அமலாக்கத் துறை காவலில் வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், உரிய காரணங்களின் அடிப்படையில்தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்