மத்திய பிரதேசம்; பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு-ஜனாதிபதி இரங்கல்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் இன்று காலை மராட்டியம் நோக்கிச் சென்ற பேருந்து, நர்மதா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 12 பயணிகள் உயிரிழந்து உள்ளனர். சிலர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து ராம்நத் கோவிந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது "மத்தியப் பிரதேசத்தின் தார் என்ற இடத்தில் நடந்த பேருந்து விபத்தில் பல பயணிகள் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.