தானே அருகே ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

விபத்துக்குள்ளான ரசாயன ஆலை பல மாதங்களாக செயல்படாமல் மூடப்பட்டு கிடந்ததாகவும், சமீபத்தில்தான் மீண்டும் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Update: 2024-05-24 06:18 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலியில் மாநில தொழில் வளர்ச்சி கழக (எம்.ஐ.டி.சி.) தொழிற்பேட்டையில் அமுதன் என்ற பெயரில் ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1.40 மணியளவில் அங்கிருந்த பாய்லர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. பாய்லர் வெடித்த சத்தம் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு மேல் கேட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக கருதி அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். அப்போது தான் டோம்பிவிலியில் உள்ள ரசாயன ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதாக அவர்களுக்கு தெரியவந்தது.

இதற்கிடையே பாய்லர் வெடித்த ரசாயன ஆலையில் தீ பற்றி எரிய தொடங்கியது. அருகில் உள்ள ஆலைகளுக்கும் தீ பரவி, அவையும் கொழுந்து விட்டு எரிந்தன.

தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை வானுயர எழுந்தது. மக்களிடையே சுவாச பிரச்சினையும் ஏற்பட்டது.

சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் பல வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் துரிதமாக ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் பாய்லர் வெடித்த ஆலை மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட அருகே உள்ள ஆலைகளில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய பலரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த ஆலைகளுக்குள் சிலர் உடல் கரிக்கட்டையாகி பிணமாக மீட்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சிலரும் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் 6 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொழிற்சாலையில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடினர். இரவிலும் தீயை அணைக்கும் பணி நடந்தது. ஆலையில் இருந்த ரசாயன பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

விபத்துக்குள்ளான ரசாயன ஆலை பல மாதங்களாக செயல்படாமல் மூடப்பட்டு கிடந்ததாகவும், சமீபத்தில்தான் மீண்டும் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து டோம்பிவிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் விபத்து நடந்த ரசாயன ஆலைக்கு மாநில தொழிற்துறை மந்திரி உதய் சாமந்த், ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் சிக்கி 8 பேர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. பாய்லர் வெடித்த போது 4 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்