கால்நடைகளை மேய்க்க சென்ற சிறுமியை கற்பழித்து உயிருடன் எரித்துக்கொன்ற அண்ணன்-தம்பி
ராஜஸ்தானில் சிறுமியை கற்பழித்து உயிருடன் எரித்துக்கொன்ற அண்ணன்-தம்பிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்து உள்ளது.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி, தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை மேய்க்க சென்றார். ஆனால் மாலையில் கால்நடைகள் மட்டும் வீடு திரும்பின. சிறுமி மாயமாகி இருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் உள்ள நிலக்கரி உலை ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
அங்கு சென்று பார்த்தபோது சிறுமியின் கிழிந்த துணிகள் மற்றும் செருப்புகள் அங்கே கிடந்தன. சிறுமியின் உயிரற்ற உடல் அந்த உலையில் எரிந்து கொண்டிருந்தது. பாதி எரிந்த நிலையில் இருந்த சிறுமியின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த காலு, கன்கா என்ற அண்ணன்-தம்பி சேர்ந்து, சிறுமியை கற்பழித்து, உயிருடன் எரித்தது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தடயங்களை மறைத்ததாக 3 பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு பில்வாரா போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், கடந்த 18-ந்தேதி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதில் காலு, கன்கா இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் காலு, கன்கா இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இது அரிதிலும் அரிதான வழக்கு என நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கில் மீதமுள்ள 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை அரசு தரப்பு வக்கீல் மகாவீர் சிங் கிஷ்ணாவத் உறுதி செய்தார். அதேநேரம் 7 பேரின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். சிறுமியை கற்பழித்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் சகோதரர்கள் இருவருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிருப்பது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.