நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் எங்கு உள்ளார்?அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தகவல்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதாகவும், அவரது சகோதரருக்கு மாதம் ரூ.10 லட்சம் அனுப்பியதாகவும், கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
மும்பை,
மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக், மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலம் வாங்கியதாகவும், இதில் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் மந்திரி நவாப் மாலிக்கை அதிரடியாக கைது செய்தனர். இதுவரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சிறையிலேயே உள்ளார். மந்திரி பதவியையும் ராஜினாமா செய்யவில்லை. குற்றப்பத்திரிகை மந்திரி நவாப் மாலிக் மீதான இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மும்பை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 2 சாட்சிகளின் பரபரப்பு வாக்குமூலம் வெளியாகி உள்ளது.
இதில் முதல் சாட்சியான தாவூத் இப்ராகிமின் சகோதரி பார்கரின் மகன் அலிஷாக் பார்கர் கூறியிருப்பதாவது:- தாவூத் இப்ராகிம் தனது தாய்வழி மாமா. 1986-க்கு பிறகு தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருப்பதாக எனது குடும்பத்தினர் மூலம் அறிந்துகொண்டேன். தாவூத் இப்ராகிம் கராச்சிக்கு குடிபெயர்ந்தபோது நான் பிறக்கவில்லை. நானோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களோ அவருடன் தொடர்பில் இல்லை. ரம்ஜான், தீபாவளி மற்றும் பிற பண்டிகை சமயங்களில் தாவூத் இப்ராகிம் மனைவி எனது மனைவி மற்றும் சகோதரிகளை தொடர்பு கொள்வார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மற்றொரு சாட்சியான காலித் உத்மான் ஷேக் அளித்த வாக்குமூலத்தில், "தாவூத் இப்ராகிம் அவரது சகோதரரான இக்பால் கஸ்கருக்கு மாதம் ரூ.10 லட்சம் பணம் அனுப்புவதாக தன்னிடம் இக்பால் கஸ்கரே தெரிவித்தார். ஒரு சில முறை அவர் தன்னிடம் உள்ள பணத்தை காட்டி தாவூத் இப்ராகிமிடம் இருந்து அதை பெற்றதாக தெரிவித்துள்ளார்" என்றார்.
இக்பால் கஸ்கர் பணமோசடி வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். இதற்கிடையே அமலாக்கத்துறை வழக்கை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தேசிய புலனாய்வு முகமை சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.