தத்தா குகைக்கோவிலை இந்துகளுக்கு உடனே ஒப்படைக்க வேண்டும்

தத்தா குகைக்கோவிலை இந்துகளுக்கு உடனே ஒப்படைக்க வேண்டும் என்று தத்தா மாலை அணியும் நிகழ்ச்சியில் ஸ்ரீராமசேனை அமைப்பின் மாநில செயல் தலைவர் கங்காதர குல்கர்னி தெரிவித்தார்.

Update: 2022-11-07 17:06 GMT

சிக்கமகளூரு:-

தத்தா குகைக்கோவில்

சிக்கமகளூரு அருகே சந்திர திரிகோணமலை பாபாபுடன்கிரி மலையில் தத்தா குகைக்கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தை இந்து, முஸ்லிம் மதத்தினர் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதற்கிைடயே ஆண்டுதோறும் தத்தா குகைக்கோவிலில் தத்தா ஜெயந்தி கொண்டாடுவது வழக்கம்.

இதில் சிக்கமகளூரு உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். மேலும் தத்தாஜெயந்தியையொட்டி தத்தா பீடத்திற்கு வந்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள்.

மாலை அணியும் நிகழ்ச்சி

இதேபோல் ஆண்டுதோறும் ஸ்ரீராமசேனை அமைப்பினரும் மாலை அணிவார்கள். அதன்படி நேற்று காலை சிக்கமகளூரு சங்கர மடத்தில் ஸ்ரீராம சேனை தொண்டர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ரீராமசேனையின் மாநில செயல் தலைவர் கங்காதர குல்கர்னி தலைமையில் தொண்டர்கள் மாலை அணிந்து விரதம் பூண்டு பஜனை பாடினர். இதற்கிடையே ஸ்ரீராமசேனையின் மாநில செயல் தலைவர் கங்காதர குல்கர்னி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரிக்கு எச்சரிக்கை

ஸ்ரீராமசேனை அமைப்பினர் சார்பில் தத்தா மாலை அணியும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதன்படி மாலை அணிந்துள்ள பக்தர்கள் ஒரு வாரகாலம் விரதம் இருந்து வருகிற 13-ந்தேதி தத்தா பீடத்திற்கு சென்று வழிபாடு நடத்தி ஆன்மிக சொற்பொழிவு, யாகம் நடத்த உள்ளோம். இதில் மாநிலம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கடந்த 18 ஆண்டுகளாக தத்தா பீடத்தை இந்துகளுக்கு நிரந்தரமாக ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்ரீராமசேனை அமைப்பு சார்பில் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறோம். தத்தா பீடத்தை இந்துகளுக்கு ஒப்படைக்காவிட்டால் முதல்-மந்திரி பதவி பறிப்போகும் என்று எடியூரப்பாவை எச்சரித்தோம். அதன்படி அவரது முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்டது. தற்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை எச்சரிக்கிறோம். இதை கருத்தில் கொண்டு தத்தா பீடத்தை இந்துக்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவிட்டும் ஓட்டு வங்கிக்காக கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருவதை நிறுத்திக்கொண்டு வரும் 13-ந் தேதிக்குள் தத்தா பீடத்தை ஒப்படைத்து இந்து அர்ச்சகரை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் வித்தியாசமாய் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்