இடி, மின்னல் தாக்கியதில் பாதிப்பு; நடுவழியில் நின்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்
ஒடிசாவின் பூரி நகரில் இருந்து புறப்பட்டு சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இடி, மின்னல் தாக்கியதில் நடுவழியில் நின்றது.
பூரி,
ஒடிசாவின் பூரி நகரில் இருந்து ஹவுரா நகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல் இன்று புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் துலாகாபாட்னா மற்றும் மஞ்சூரி சாலை ரெயில் நிலையம் இடையே வந்தபோது, நடுவழியில் நின்று விட்டது.
அந்த பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் ரெயிலின் மேல்வழியே செல்ல கூடிய மின் கம்பி பாதிக்கப்பட்டு விட்டது. கடும் புயல் வீசியதில் மரம் சாய்ந்து விழுந்து அதனால், பாதிப்பு ஏற்பட்டு இருக்க கூடும் என நம்பப்படுகிறது. எனினும், இதனால் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதுபற்றி பத்ரக் பகுதியின் ரெயில்வே நிலைய மேலாளர் பூர்ண சந்திர சாஹூ செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ரெயிலின் முகப்பு பக்க கண்ணாடி மற்றும் ரெயில் ஓட்டுநர் அறையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் பகுதிகள் ஆகியவை இடி தாக்கியதில் சேதமடைந்து உள்ளன.
ரெயிலின் மின் விநியோகமும் கூட துண்டிக்கப்பட்டு விட்டது. யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறியுள்ளார். இந்த ரெயிலானது கடந்த 18-ந்தேதி பிரதமர் மோடியால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.