பா.ஜ.க.வில் இணைந்த, ஐக்கிய ஜனதா தள கட்சியின் தாத்ரா நாகர் ஹாவேலி, டையூ டாமன் பிரிவினர்
ஐக்கிய ஜனதா தளத்தின் தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி, டையூ டாமன் பிரிவினர் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளனர்.
புதுடெல்லி,
பீகாரில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக கடந்த ஆகஸ்டு மாதம் நிதிஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார்.
வருகிற பொது தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை தேசிய அளவில் உருவாக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் டெல்லி சென்றார். இது தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது.
எனினும் அவரது கட்சியில் இருந்து உறுப்பினர்கள் பலர் பா.ஜ.க.வில் இணைந்து அவருக்கு பின்னடைவு ஏற்படுத்தி வருகின்றனர்.
அருணாச்சல பிரதேசத்தில் 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 15 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்திலும் இருந்தது.
பா.ஜ.க. 41 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், டிசம்பர் 25, 2020 அன்று, ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஆறு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். அதன்பின் ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த டெக்கி காசோ கடந்த ஆகஸ்டில் பா.ஜ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
இதனால், அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு உறுப்பினர்கள் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
இதேபோன்று, மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. 60 சட்டசபை தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. 32 இடங்களில் வெற்றி பெற்றது. 6 இடங்களில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள் விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இந்த சூழலில், ஐக்கிய ஜனதா தளத்தின் டையூ டாமனுக்கான பிரிவில் உள்ள 15 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் மாநிலத்தின் ஒட்டு மொத்த பிரிவும் பா.ஜ.க.வில் இணைகின்றன என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த 13-ந்தேதி கூறினார்.
இதன்படி, ஐக்கிய ஜனதா தளத்தின் தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி, டையூ டாமன் பிரிவினர் பா.ஜ.க.வில் இன்று முறைப்படி இணைந்துள்ளனர். அவர்கள் ஜே.பி. நட்டா மற்றும் கட்சியின் தேசிய பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்துள்ளனர்.