மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு!
மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. சி.யு.ஈ.டி எனப்படும் இத்தேர்வை எழுத 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இளங்கலை படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளங்கலை படிப்புகளில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு, வரும் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி, இத்தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூலை 15, 16, 19, 20 மற்றும் ஆகஸ்ட் 4, 5, 6, 7, 8, 10 ஆகிய தேதிகளில் கணினி வழித்தேர்வாக நடைபெறவுள்ளது.நாடு முழுவதும் 554 நகரங்களிலும், வெளிநாடுகளில் 13 நகரங்களிலும் இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்றும், நாளையும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இதுவரை விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு தேசிய தேர்வு முகமை இணையதளங்களை - cuet.samarth.ac.in மற்றும் nta.ac.in ஐ தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பொது நுழைவுத்தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பிரதிபலிப்பதால், சிபிஎஸ்இ தவிர மற்ற வாரியங்களில் படித்த மாணவர்களுக்கு இது பாதகமாக இருக்கும் என்று விமர்சகர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.