தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல்: பா.ஜனதா பொறுப்பாளர் இன்று புதுச்சேரி வருகை

மாநில பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இன்று புதுச்சேரிக்கு வருகிறார்.

Update: 2024-07-08 02:27 GMT

கோப்புப்படம்

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜனதா மற்றும் பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பின்னர் அவர்கள் டெல்லி சென்று கட்சியின் தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து புகார் தெரிவித்தனர். அப்போது புதுவையில் அமைச்சர் பதவிகளை சுழற்சி முறையில் மாற்றி வழங்க வேண்டும் என்றும், ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம் என்றும் யோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் புதுவைக்கு திரும்பினார்.

இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் புதுவை மாநில பொறுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள நிர்மல்குமார் சுரானாவிடம், புதுவையில் ஏற்பட்டுள்ள கூட்டணி மோதல் மற்றும் உட்கட்சி பிரச்சினைக்கு சமரசம் காணும்படி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நிர்மல்குமார் சுரானா இன்று (திங்கட்கிழமை) புதுவை வருகிறார். பின்னர் அவர் காலை 10.30 மணியளவில் பா.ஜனதா மற்றும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ. க்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து அவர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்