கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது; பாரத் பயோடெக் நிறுவனம்

கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது என்றும் தெரிவித்து உள்ளது.

Update: 2024-05-02 12:31 GMT

புதுடெல்லி,

இந்தியாவில், 2020-ம் ஆண்டு மத்தியில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்தது. அதன்பின்னர், அடுத்தடுத்து முதல் அலை, இரண்டாம் அலை என பரவி மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அதனை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

அந்த வகையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இதன் செயல்திறன் 81 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இதன் செயல்திறன் 70 சதவீதம் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

நம்முடைய நாட்டில் கோடிக்கணக்கானோர் இந்த இரு வகை தடுப்பூசிகளை அதிகம் பயன்படுத்தினர். இவற்றில், கோவிஷீல்டு தடுப்பூசியே இந்தியாவில் பரவலாக தட்டுப்பாடின்றி கிடைத்தது. இதுபோக, 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் வீணாகிவிட்டன என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் மரணங்களும் மற்றும் கடுமையான காயங்களும் நிறைய பேருக்கு ஏற்பட்டு உள்ளன என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து ஐகோர்ட்டில் இதற்கு எதிராக 51-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. ரூ.1,047 கோடி வரை இழப்பீடு தொகை தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த சூழலில், ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் சமீபத்தில் கோர்ட்டில் அளித்துள்ள ஆவணங்களில், மிக அரிய வகையாக டி.டி.எஸ். என்ற பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தது. இந்த டி.டி.எஸ். பாதிப்பால், ரத்த உறைதல் ஏற்படுவதுடன், மனிதர்களின் ரத்தத்தில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைவும் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த சூழலில், கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது, தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

நம்முடைய நாட்டில், மிக இளம் வயதில் திடீரென இளைஞர்கள், இளம்பெண்கள் பலர், ஜிம், திருமண விருந்து, திருவிழாக்கள் போன்ற பல்வேறு இடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பின்னரே இந்த நிலை காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது. இந்த சூழலில், தடுப்பூசி நிறுவனத்தின் ஒப்புதல் பற்றிய தகவல் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த தகவல் பரவியதும் கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதனை போக்கும் வகையில், கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் இன்று தெரிவித்து உள்ளது.

இதனால், ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது என்றும் அதனால், கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்