கிராமங்களில் மயானங்கள் அமைப்பது தொடர்பான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

கிராமங்களில் மயானங்கள் அமைப்பது தொடர்பான வழக்கில், உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசுக்கு அதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனக்கூறி ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update:2023-02-01 00:15 IST

பெங்களூரு:

மயானங்கள்

கர்நாடகத்தை சேர்ந்த முகமது இக்பால் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், அனைத்து கிராமங்களிலும் மயானங்கள் அமைக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரினார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி, கடந்த 2019-ம் ஆண்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் மயானம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அந்த உத்தரவை மாநில அரசு சரியாக செயல்படுத்தவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அந்த உத்தரவை மாநில அமல்படுத்தவில்லை என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாரர் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு விசாரித்தது. அப்போது கர்நாடக அரசு ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் கர்நாடகத்தில் 23 ஆயிரத்து 815 மயானங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 3 ஆயிரத்து 765 மயானங்கள் அமைக்க வேண்டியுள்ளதாகவும் கூறியது.

காலஅவகாசம்

அரசு நிலங்கள் இல்லாத 516 இடங்களில் தனியாரிடம் இருந்து நிலம் வாங்கி மயானம் அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மனு நேற்று நீதிபதிகள் வீரப்பா, ஹேமலேகா ஆகியோர் கொண்ட அமர்வின் முன்னிலையில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கர்நாடக அரசு வக்கீல், மயானம் இல்லாத கிராமங்களில் மயானங்கள் அமைக்க இன்னும் 2 வாரங்கள் காலஅவகாசம் வழங்குமாறு கேட்டார்.

அதற்கு நீதிபதிகள், மயானங்கள் அமைப்பது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு 2 வாரங்களில் நிறைவேற்ற வேண்டும். வழக்கின் விசாரணை 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஒருவேளை இந்த உத்தரவை 2 வாரத்திற்குள் அமல்படுத்தாவிட்டால், வருகிற 8-ந் தேதி தலைமை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும். அவருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்