ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா...? டி.கே. சிவக்குமார் பதில்
காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் எதிராக ஒரு பெரிய சதித்திட்டம் உள்ளது என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பார்வதிக்கு இதற்கு முந்தின பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கோரி சமூக ஆர்வலர்கள் டி.ஜே. ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். அந்த மனு குறித்து விளக்கம் அளிக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 19-ந்தேதி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதி நாகபிரசன்னா, மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணைக்கு உகந்தவை என்று குறிப்பிட்டார். இதனையடுத்து, சித்தராமையா மீது விசாரணை நடத்த கவர்னர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி சித்தராமையா தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
சித்தராமையாவுக்கு எதிராக விசாரிக்க கவர்னர் அளித்த ஒப்புதலுக்கு தடை கோரிய வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக மந்திரிசபையினர் உள்ளனர். அவர் பதவி விலக வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, முதல்-மந்திரி ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை. பா.ஜ.க.வின் அரசியல் சதித்திட்டம் இது என கூறியுள்ளார். அவர் எந்தவித தவறும் செய்யவில்லை. எந்த ஊழலுடனும் அவருக்கு தொடர்பு இல்லை. நம் அனைவருக்கும் மற்றும் நாட்டின் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் எதிரான பா.ஜ.க.வின் அரசியல் சதித்திட்டம் இது என கூறியுள்ளார்.
நாங்கள் அவருக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருக்கிறோம். நாட்டுக்கும், கட்சிக்கும் மற்றும் மாநிலத்திற்கும் நல்லதொரு பணியை அவர் செய்து வருகிறார் என்றார். காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் எதிராக ஒரு பெரிய சதித்திட்டம் உள்ளது என கூறிய அவர், எனினும் நாட்டின் சட்ட நடைமுறையை எங்களுடைய கட்சி மதிக்கிறது என்றும் கூறியுள்ளார்.