ஆந்திராவில் தொடர் கனமழை: வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு

ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய மையத்தில் அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு நடத்தினார்.

Update: 2024-09-01 11:04 GMT

விஜயவாடா,

ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு திடீர் கனமழை கொட்டியது. நள்ளிரவு பெய்ய தொடங்கிய கனமழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. சுமார் 2 மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் 2 முதல் 3 அடிக்கு மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

முக்கிய சாலைகளை வெள்ளம் மூழ்கடித்தது. இதில் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின. பல்வேறு இடங்களில் பஸ் நிலையங்களுக்குள் மழை நீர் புகுந்ததால், பஸ் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் என்.டி.ஆர். மாவட்டத்தின் விஜயவாடா நகரில் உள்ள மொகல்ராஜபுரம் பகுதியில் கனமழையின் காரணமாக நேற்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் ஒரு பகுதி இடிந்து, பெரிய கற்கள் மலையில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மீது விழுந்தன. இந்த நிலச்சரிவில் 15 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. அதன் இடிபாடுகளில் பலர் சிக்கினர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.

இதில் இடிபாடுகளில் இருந்து 4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதனிடையே கனமழையை தொடர்ந்து குண்டூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆந்திராவில் பெய்துவரும் கனமழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். பல தாழ்வான பகுதிகளிலும் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 80 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு மழை நிலவரம் பற்றி தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உடனடியாக ரூ.3 கோடியை ஒதுக்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய மையத்தில் அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு நடத்தினார்.

இதனிடையே கனமழை காரணமாக விஜயவாடா - வாரங்கல் மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடா - கம்மம் பாதையில் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மகபூபாத் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டலபுசலபல்லி அருகே தண்டவாளம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. கேசமுத்ரம் ரெயில் நிலையத்திலும் இதே நிலைதான் நிலவுகிறது. ரெயில் ரத்து, மாற்றுப் பாதையில் இயக்கப்படுவது குறித்த தகவல்களை அறிய 044 - 25354995, 044 - 25354151 ஆகிய தொடர்பு எண்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்