மனைவி தூக்கிட்டு தற்கொலை, போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - குடும்ப பிரச்சினையால் விபரீதம்

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையடுத்து போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-04-23 10:14 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகோட் மாவட்டம் தேவ்காளி கிராமத்தை சேர்ந்தவர் மயங் குமார் (வயது 35). இவரது மனைவி குஷம் தேவி (வயது 24). போலீசாக பணியாற்றிவரும் மயங் குமார் பிஜ்நூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில் தேர்தல் பணியை முடித்துவிட்டு மயங் குமார் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்துள்ளார். இதனிடையே, மயங் குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மயங்கிற்கும் தேவிக்கும் இடையே நேற்று இரவு மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த தேவி நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இரவு மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்ட மயங்க் துக்கம் தாங்காமல் தான் வைத்திருந்த அரசு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப சண்டையில் மனைவி தூக்கில் தொங்கியதால் மன உளைச்சல் அடைந்த கணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்