கெஜ்ரிவாலுக்கு தீங்கு ஏற்படுத்த சதி; மாலிவாலுக்கு எதிராக உதவியாளர் பரபரப்பு புகார்
கெஜ்ரிவாலின் தனி உதவியாளருக்கு எதிராக மிரட்டல் விடுத்த மாலிவால், நிச்சயம் விளைவுகளை சந்திக்கும் வகையில், சிறையில் கிடந்து துன்பப்படும்படி செய்து விடுவேன் என்று கூறியுள்ளார் என புகார் தெரிவிக்கின்றது.
புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகாரும் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை ஏழெட்டு முறை கன்னத்தில் அறைந்ததாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். மேலும், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் பிபவ் குமார் தாக்கியதாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், புதிதாக, சுவாதி மாலிவாலுக்கு எதிராக சிவில் லைன் பகுதிக்கு உட்பட்ட போலீசாரிடம் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், முன்அனுமதி பெறாமல், அத்துமீறி உள்ளே நுழைந்ததுடன், தகாத வார்த்தைகளாலும், மிரட்டல் விடும் வகையிலும் அவர் பேசினார் என்று தெரிவித்து உள்ளார்.
முதல்-மந்திரியிடம், சந்திப்பதற்கான முன்அனுமதியை பெற்று வரும்படி மாலிவாலிடம் கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால், அதனை மீறும் வகையில் நடந்து கொண்டார். முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியாளர்களிடமும் தகாத வார்த்தைகளால் பேசினார் என்றும் ஒழுங்குமுறைகளை மீறி நடந்து கொண்டார் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த புகாரில், மாலிவால் கத்த தொடங்கினார். அலறி, கூச்சல் போட்டார். பாதுகாப்பு அதிகாரிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது? என கேள்வி எழுப்ப தொடங்கினார். அவருடைய நோக்கங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளன. மதிப்பு வாய்ந்த முதல்-மந்திரிக்கு எதிராக, தீங்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவரது செயல் உள்ளது என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவுக்கு எதிராக மாலிவால் மிரட்டல் விடுத்ததுடன், நிச்சயம் விளைவுகளை நீ சந்திக்கும் வகையில் செய்து விடுவேன். ஆயுசுக்கும் சிறையில் கிடந்து துன்பப்படும்படி செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். அவருடைய செயலுக்கு சட்டப்படி அவரே பொறுப்பாவார்.
இது தேர்தல் நேரம். அதனால், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு இருக்க கூடும். பா.ஜ.க.வினருடனான அவருடைய தொலைபேசி பதிவுகள், உரையாடல்கள் மற்றும் சாட்டிங்குகளை விசாரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்றும் புகார் தெரிவிக்கின்றது. இதற்கு பின்னணியில் பா.ஜ.க. இருக்கும் சாத்தியம் உள்ளது என்றும் புகாரில் தெரிவித்து உள்ளார்.