டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர சதி - அதிஷி குற்றச்சாட்டு

பொய்யான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி கூறியுள்ளார்.;

Update:2024-04-12 12:19 IST

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர சதி நடைபெறுவதாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி மந்திரியுமான அதிஷி கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது;

"பொய்யான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க திட்டமிட்டு சதி நடக்கிறது. டெல்லியில் எந்த அதிகாரிகளும் நியமிக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்படுவதும் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிகாரிகளை கூட்டங்களில் கலந்துகொள்ளவிடாமல் தடுக்கின்றனர்." இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்