பா.ஜ.க வேட்பாளர் சுரேஷ் கோபியை வீழ்த்த காங்கிரஸ் கையில் எடுத்த வியூகம்

பத்மஜா பா.ஜ.க.வில் இணைந்ததையடுத்து காங்கிரஸ் கட்சி சக்தி வாய்ந்த வேட்பாளரான கே. முரளிதரனை அந்த தொகுதியில் களம் இறக்குகிறது.

Update: 2024-03-08 10:37 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் தற்போது எம்.பியாக இருப்பவர் டி.என். பிரதாபன். காங்கிரசை சேர்ந்த இவர் தான் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தனது தொகுதியில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை நடத்தி இருப்பதோடு , பாராளுமன்ற தொகுதி முழுவதும் சென்று பிரச்சாரம் செய்து வந்தார். 150 இடங்களில் அவரது பெயரில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு 3 .5 லட்சத்துக்கு அதிகமான போஸ்டர்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்ட நிலையில், திடீரென்று அவர் போட்டியில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கு காரணம் பத்மஜா .இவர் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகள் ஆவார். காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த இவர் இப்போது பா.ஜனதாவில் ஐக்கியமாகி விட்டார். பத்மஜா தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி அங்கு பா.ஜனதா வெற்றிக்கு வழி வகுப்பார் என்ற சந்தேகம் கட்சி மேலிடத்துக்கு ஏற்பட்டதே வேட்பாளர் மாற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். ஆளும் இடது முன்னணி வேட்பாளராக வலது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சுனில் குமார் களத்தில் உள்ளார். பத்மஜா கட்சி மாறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சக்தி வாய்ந்த வேட்பாளரான கே. முரளிதரனை அந்த தொகுதியில் களம் இறக்குகிறது. இவர் கருணாகரனின் மகன் ஆவார். சகோதரியின் சவாலை முரளிதரன் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

திருச்சூர் பகுதி மறைந்த கருணாகரனின் அரசியல் சக்தி வாய்ந்த பிராந்தியமாக கருதப்படுகிறது. இந்த தொகுதியை கைப்பற்ற பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அங்கு போட்டியிரும் நடிகர் சுரேஷ்கோபி பல மாதங்களுக்கு முன்பே தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். அவரை எதிர்கொள்ள தற்போதய எம். பி.பிரதாபனை விட சக்தி மிக்க ஒரு வேட்பாளர் தேவை என்ற முடிவுக்கு வந்த காங்கிரஸ் முரளிதரனை இங்கு நிறுத்தி உள்ளது,.

இதைத்தொடர்ந்து பிரதாபன் பெயரில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை மாற்றவும் , போஸ்டர்களை நீக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்களிடம் உத்தரவிட்டு உள்ளனர்.வடகரா தொகுதியில் போட்டியிடுவதற்கு தேவையான பணிகளை கே. முரளிதரன் தொடங்கி இருந்தார். காங்கிரசின் இந்த அதிரடி மாற்றம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்