விசாரணைக்கு உத்தரவிட கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
அதானி நிறுவனங்களின் மோசடி குறித்த விசாரணைக்கு உத்தரவிட கோரி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
பெங்களூரு:-
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவை சேர்ந்த 'இன்டன்பர்க்' என்ற அமைப்பு, கவுதம் அதானியின் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்டது. இதனால் அவரது குழும நிறுவனங்கள் பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அந்த நிறுவனத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கியுள்ளது. இதனால் அங்கு முதலீடு செய்துள்ளவர்கள் அச்சத்தில் உள்ளனர். அதானியின் மோசடி குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு கண்காணிப்பில் விசாரணை நடத்த கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதே போல் கர்நாடக காங்கிரஸ் சார்பில் அதன் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் மந்திரிகள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள், அதானியின் மோசடிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அவர்களில் சிலர் மோடி, அதானி, நிர்மலா சீதாராமன் ஆகியோரின் முகமூடி அணிந்து இருந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
அவர்கள் தங்களின் கைகளில் பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதானியின் மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரினர். காங்கிரசாரின் ஆர்ப்பாட்டத்தால் மைசூரு வங்கி சர்க்கிளில் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் சிறிது போக்குவரத்து நெரிசல் உண்டானது.