காங்கிரஸ் கட்சி எப்போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது: அமித்ஷா பேச்சு

அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன் என்று அமித்ஷா பேசியுள்ளார்.

Update: 2024-07-16 10:46 GMT

சண்டிகார்,

அரியானாவில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரியானாவின் மகேந்திரகார் நகரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மாநாடு நடந்தது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், காங்கிரஸ் கட்சி எப்போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கட்சியாகவே உள்ளது என்று கூறினார். அவருடைய பேச்சின்போது, 1950-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட காகா கலேகர் ஆணையம் பற்றி குறிப்பிட்டு பேசினார்.

ஓ.பி.சி.க்கு (இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு) இடஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. எனினும், காங்கிரஸ் கட்சி இந்த பரிந்துரைகளை பல ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை என்று அமித்ஷா கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, 1980-ம் ஆண்டில் இந்திரா காந்தி (அப்போது பிரதமராக இருந்தவர்), மண்டல் கமிஷனை கிடப்பில் போட்டு விட்டார். 1990-ம் ஆண்டில் அது ஏற்று கொள்ளப்பட்டபோது, ராஜீவ் காந்தி இரண்டரை மணிநேரம் வரை உரையாற்றி விட்டு, ஓ.பி.சி. இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டார்.

கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ் கட்சி, முஸ்லிம்களிடம் அதனை கொடுத்து விட்டது. அரியானாவில் அவர்கள் வெற்றி பெற்றால் அதேமுறையை செயல்படுத்துவார்கள்.

அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று உங்களுக்கு நான் உறுதி கூற விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்