எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக காங்கிரஸ் விரைவில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் - பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக காங்கிரஸ் விரைவில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கப்போவதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதற்காக பல்வேறு தலைவர்களையும் சந்தித்து இருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சி ஒற்றுமை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி விரைவில் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பீகாரின் பர்னியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறுகையில், 'தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான இறுதி முடிவை காங்கிரஸ் விரைவில் எடுக்க வேண்டும். இதில் ஏற்படும் எந்த தாமதமும் பா.ஜனதாவுக்கு பெருமளவில் பயனளித்து விடும்' என எச்சரித்தார். காங்கிரஸ் தனது நடவடிக்கையைத் தொடங்குவதற்காக பல கட்சிகள் காத்திருப்பதாக கூறிய நிதிஷ்குமார், பா.ஜனதாவை விட்டு காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தபோது பிற மாநிலங்களை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
இந்து-முஸ்லிம் பெயரில் நாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய நிதிஷ்குமார், இந்த விவகாரத்தை முன்வைத்து ஒட்டுமொத்த நாட்டையும் சீர்குலைக்க விரும்புவதாகவும் கூறினார்.