பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு
பஜ்ரங்தள அமைப்பை தடை செய்ய உள்ளதாக காங்கிரஸ் கூறியதை கண்டித்து, நாடு முழுவதும் வருகிற 9-ந்தேதி (நாளை) அனுமல் பாடல், மந்திரங்கள் ஒலிபரப்பு செய்யப்படும் என இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.
பெங்களூரு:-
பஜ்ரங்தள அமைப்புக்கு தடை
கர்நாடகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பு பெற்றுள்ள நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் பஜ்ரங்தள அமைப்பை தடை செய்ய உள்ளதாக காங்கிரஸ் தனது வாக்குறுதியில் கூறி இருந்தது. காங்கிரசின் வாக்குறுதிக்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி (நாளை) நாடு முழுவதும் அனுமன் பாடல்கள் மற்றும் மந்திரங்கள் ஒலிக்கப்படும் என விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள அமைப்புகள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து விசுவஇந்து பரிஷத் அமைப்பு பொதுச்செயலாளர் மலிந்த் பராந்தே கூறியதாவது:-
கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்தவுடன் பஜ்ரங்தள அமைப்பை தடை செய்ய உள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டதால் தான் பி.எப்.ஐ. அமைப்பை மத்திய அரசு தடை செய்தது.
நல்ல மனநிலை
ஆனால் பஜ்ரங்தள அமைப்பால் இதுவரை எந்த பயங்கரவாத சம்பவங்களும் நடக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்து அமைப்பை தடை செய்ய வாக்குறுதி அளித்துள்ளது. இது இந்துக்களை அவமதிக்கும் செயல் ஆகும். எனவே இந்துக்களை பாதிக்கும் விதமாக காங்கிரஸ் செயல்படுவதால் வருகிற 9-ந் தேதி (நாளை) நாடு முழுவதும் அனுமன் பாடல்கள் மற்றும் மந்திரங்கள் ஒலிபரப்பு செய்யப்படும்.
அந்த ஒலியை கேட்ட பின்பாவது, இந்தியாவுக்கும், இந்துக்களுக்கும் எதிராக செயல்படவேண்டும் என நினைப்பவர்களின் மனநிலையை மாற்றி, அவர்களுக்கு நல்ல எண்ணங்களை உருவாக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.