லஞ்ச வழக்கில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ.; கர்நாடக முதல்-மந்திரி ராஜினாமா செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

லஞ்ச வழக்கில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. விவகாரத்தில் முதல்-மந்திரி ராஜினாமா செய்ய கோரி காங்கிரசார் போராட்டம் நடத்தினர். ஆனால் பதவி விலக மாட்டேன் என பசவராஜ்பொம்மை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

Update: 2023-03-04 21:42 GMT

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா.

ரூ.40 லட்சம் லஞ்சம்

இவர், மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் வாரிய தலைவராக இருந்தார். மைசூரு சாண்டல் சோப்பு நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய ஒரு ஒப்பந்ததாரரிடம் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டு, ரூ.40 லட்சத்தை பெறும் போது மாடால் விருபாக்ஷப்பாவின் மகனும், அரசு அதிகாரியுமான பிரசாந்த் லோக் அயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் வாரிய தலைவர் பதவியை மாடால் விருபாக்ஷப்பா ராஜினாமா செய்துள்ளார். ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் முதல் குற்றவாளியாக எம்.எல்.ஏ. பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா எம்.எல்.ஏ. ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

காங்கிரஸ் போராட்டம்

ஏற்கனவே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு 40 சதவீத கமிஷன் பெறுவதாகவும், பே-சி.எம். என்ற பிரசாரத்தையும் காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பா.ஜனதா எம்.எல்.ஏ. ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி இருப்பது லோக் அயுக்தா சோதனையில் உறுதியாகி இருப்பதால், மாடால் விருபாக்ஷப்பாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று முதல்-மந்திரி பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பசவராஜ் பொம்மை தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் பெங்களூருவில் நேற்று சித்தராமையா தலைமையில் நடந்தது.

முதல்-மந்திரி வீட்டை...

பெங்களூரு ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து, அதே ரோட்டில் உள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் வீட்டை முற்றுகையிடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்கள். இதில், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, செயல் தலைவர்கள் ராமலிங்க ரெட்டி, சலீம் அகமது, முன்னாள் மந்திரிகள் தினேஷ் குண்டுராவ், பிரியங்க் கார்கே, கிருஷ்ண பைரேகவுடா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். சித்தராமையா தனது கையில் சூட்கேஸ் பெட்டியை வைத்திருந்தார். இதுபோல், மாடால் விருபாக்ஷப்பா வீட்டில் சிக்கிய பல கோடி ரூபாய் நோட்டுகளுடன் இருந்த புகைப்படங்கள், எம்.எல்.ஏ.வை கைது செய்ய வலியுறுத்தியும், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய கோரிய வாசங்கள் அடங்கிய பதாகைகளையும் காங்கிரஸ் தலைவர்கள் வைத்திருந்தார்கள்.

அரசுக்கு எதிராக கோஷம்

அத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், 40 சதவீத கமிஷன் அரசு என்றும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கைது செய்ய வலியுறுத்தியும், மக்களுக்கு எதிரான பா.ஜனதா கட்சி என்றும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை பதவி விலக வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கோஷம் எழுப்பியபடி சென்றார்கள். பின்னர் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் வைத்து முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிட சென்ற காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

போலீசாரின் பாதுகாப்பையும் மீறி முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிட சென்ற நூற்றுக்கணக்கான தொண்டர்களை போலீசார் கைது செய்தார்கள். அதுபோல், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களையும் போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர்களை பஸ்சில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றார்கள். சில தலைவர்கள் சாலையில் அமர்ந்து கொண்டு எழாமல் இருந்ததால், அவர்களை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கி சென்றனர்.

ராஜினாமா செய்ய வேண்டும்

போராட்டத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், 'மாநிலத்தில் 40 சதவீத கமிஷன் அரசு நடைபெற்று வருகிறது. லோக் அயுக்தா போலீஸ் சோதனையில் இது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளது. காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு பா.ஜனதாவினர் ஆதாரம் கேட்டனர். அந்த ஆதாரத்தை லோக் அயுக்தா போலீசார் கொடுத்துள்ளனர். எனவே இனியும் தாமதிக்காமல் முதல்-மந்திரி பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்ய வேண்டும். மாடால் விருபாக்ஷப்பாவையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்', என்றார்.

முதல்-மந்திரியின் வீட்டை காங்கிரஸ் தலைவர்கள் முற்றுகையிட முயன்றதால், ரேஸ் கோர்ஸ் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள். காங்கிரஸ் தலைவர்களின் போராட்டம் மற்றும் அவர்களை போலீசார் கைது செய்ததால் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சித்ரதுர்காவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சித்தராமையா ராஜினாமா செய்தாரா?

காங்கிரஸ் ஆட்சியில் 59 ஊழல் முறைகேடு வழக்குகள் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் வெளியே வராமல் இருக்கத்தான் சித்தராமையா லோக் அயுக்தாவுக்கு மூடு விழா நடத்தி விட்டு, ஊழல் தடுப்பு படையை கொண்டு வந்திருந்தார். லோக் அயுக்தா இருந்திருந்தால், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தும் வெளியே வந்திருக்கும். இப்படிப்பட்ட சித்தராமையாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு இல்லை.

சித்தராமையா ஆட்சியில் ஒரு மந்திரி ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி இருந்தார். மந்திரி லஞ்சம் வாங்கியதற்காக முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்திருந்தாரா?. அப்படி இருக்கையில் என்னை ராஜினாமா செய்ய சொல்வதற்கு சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் என்ன தகுதி இருக்கிறது.

பா.ஜனதா மேலிடம் முடிவு

காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் காரணங்களுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ், இந்து அமைப்பினர் எத்தனை பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

இந்த கொலைக்கு காரணமான பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் மீது பதிவாகி இருந்த வழக்குகள் காங்கிரஸ் ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற கீழ்மட்ட அரசியலை காங்கிரஸ் கட்சி மட்டுமே செய்கிறது.

பதவி விலக வேண்டிய அவசியமில்லை

எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா லஞ்ச விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு தெரிவித்துள்ளேன். அவர், பா.ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா?, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வாரா? என்பது பற்றி பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள்.

லோக் அயுக்தா அமைப்பு சுதந்திரமானது. இந்த வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகளை போலீசார் எடுப்பார்கள். எனவே நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. பதவி விலக மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்