ஊழல் பணத்தில் பா.ஜனதாவின் சாதனை விளக்க மாநாடு; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு

ஊழல் பணத்தில் சாதனை விளக்க மாநாட்டை பா.ஜனதா நடத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-10 17:12 GMT

பெங்களூரு:

உப்பள்ளியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மக்கள் பிரச்சினையை தீர்க்கவில்லை

கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் அரசு நடைபெற்று வருகிறது. சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் 40 சதவீத கமிஷன் குறித்து பிரச்சினையை எழுப்புவோம். தாவணகெரேயில் எனது 75-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம். இதற்கு லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். என் மீது மக்கள் கொண்ட அன்பு காரணமாக தாவணகெரேயில் நடந்த பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்தார்கள்.

தற்போது தொட்டபள்ளாப்புராவில் பா.ஜனதாவினர் ஜனஸ்பந்தனா என்ற பெயரில் சாதனை விளக்க மாநாடு நடத்தி வருகிறார்கள். இந்த சாதனை விளக்க மாநாட்டுக்கு மக்கள் தாமாக வந்தார்களா?. பா.ஜனதாவினர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பணம் கொடுத்து மக்களை அழைத்து வந்திருக்கிறார்களா?. ஜனஸ்பந்தனா என்றால், மக்கள் பிரச்சினையை தீர்ப்பதாகும். பா.ஜனதாவினர் மக்களுக்கான எந்த பிரச்சினையும் தீர்க்கவில்லை.

ஊழல் பணத்தில் மாநாடு

கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் செய்த பணத்தில் சாதனை விளக்க மாநாடு நடத்துகிறாா்கள். பா.ஜனதாவில் மூத்த மந்திரிகளில் ஒருவர் உமேஷ் கட்டி. அவர் 8 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தவர். வடகர்நாடக மாவட்டங்களில் முக்கிய தலைவர்களில் உமேஷ் கட்டியும் ஒருவர். அவர் மரணம் அடைந்த பின்பு, ஒருநாள் துக்கம் அனுசரிப்பதா?, 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதா? என்று கூட பா.ஜனதா தலைவர்களால் முடிவு எடுக்க முடியவில்லை. உமேஷ் கட்டி மரணம் அடைந்த சில நாட்களிலேயே சாதனை விளக்க மாநாடு நடத்தி, மந்திரிகள் நடனமாடி மகிழ்கிறார்கள்.

இதன்மூலம் பா.ஜனதாவின் மூத்த தலைவரான உமேஷ் கட்டியை அவமானப்படுத்தி விட்டனர். பா.ஜனதாவுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கிடையாது. அவர்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும். ஊழல் புரிய வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பசவராஜ் பணம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்