அரசு ஊழியரின் கட்டாய ஓய்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

ரூ.50 லஞ்சம் வாங்கியதாக அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பணியாளர் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-10-10 18:45 GMT

பெங்களூரு:

கட்டாய ஓய்வு

தார்வாரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றியவர் சந்திராச்சாரி. அதே அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தவர் கடகோல். இந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு சந்திராச்சாரியும், கடகோலும் சேர்ந்து ஒருவரிடம் இருந்து ரூ.150 லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்ச பணத்தில் ரூ.50-ஐ கடகோல் வாங்கி கொண்டதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக சந்திராச்சாரி, கடகோலை லோக் அயுக்தா போலீசார் கைது செய்து இருந்தனர்.

இதன்பின்னர் சந்திராச்சாரி, கடகோல் மீது துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் 2 பேரும் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டு இருந்ததால் 2 பேருக்கும் கர்நாடக பணியாளர் ஒழுங்கு ஆணையம் கடந்த 2004-ம் ஆண்டு கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டது. கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட போது கடகோலுக்கு 15 ஆண்டுகள் பணி செய்ய கால அவகாசம் இருந்தது.

ஏற்றுக்கொள்ள முடியாது

இதையடுத்து கர்நாடக பணியாளர் ஒழுங்கு ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் கடகோல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.ஜி.பண்டித், ராம்நாத் ஹெக்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த நிலையில் மனு மீதான இறுதி விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் மனுதாரர் ரூ.50 லஞ்சம் பெறவில்லை. என்ஜினீயர் வாங்கிய லஞ்சத்தில் இருந்து ரூ.50 கடனாக வாங்கி இருந்தார். மனுதாரர் தனது பணி காலத்தில் யாரிடமும் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு இல்லை. ரூ.50 லஞ்சம் வாங்கினார் என்று கூறி கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்.

நியாயம் இல்லை

அதுபோல அரசு சார்பில் ஆஜரான வக்கீலும் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ரூ.50 லஞ்சம் வாங்கினார் என்று கூறி 18 ஆண்டுகள் பணி செய்த அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு அளித்தது நியாயம் இல்லை என்று கூறினர்.

மேலும் ஒழுங்கு ஆணையத்தின் கட்டாய ஓய்வு உத்தரவையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கட்டாய ஓய்வு உத்தரவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்