வியாபார ரீதியாக என்னுடன் தொடர்பில் உள்ள 80 பேருக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்பி உள்ளது- டி.கே.சிவக்குமார்
தன்னுடன் வியாபார ரீதியாக தொடர்பில் உள்ள 80 பேருக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்பி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.;
பெங்களூரு: தன்னுடன் வியாபார ரீதியாக தொடர்பில் உள்ள 80 பேருக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்பி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரசின் ஏஜெண்டு
ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா கடந்த ஓராண்டில் என்னையோ அல்லது சித்தராமையாவையோ ஒரு முறை கூட சந்தித்தது கிடையாது. நேற்று தான்(நேற்று முன்தினம்) சித்தராமையாவை கெம்பண்ணா சந்தித்து பேசியுள்ளார். அதனால் கெம்பண்ணா காங்கிரசின் ஏஜெண்டு என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை கெம்பண்ணா சந்தித்து பேசினார். அவர் காங்கிரசின் ஏஜெண்டு என்றால் முதல்-மந்திரியை சந்தித்தது ஏன்?.
சாம்ராஜ்நகர் விவசாய சங்க நிர்வாகிகள், மந்திரி முனிரத்னாவுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பா.ஜனதாவினரின் ஊழல்களை அம்பலப்படுத்தும் மாநாடுகளை நாங்கள் நடத்த இருக்கிறோம். ஒப்பந்ததாரர்கள் ஊழல் குறித்து பேசும்போது, அதற்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்.
கல்வித்துறையின் ஊழல்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடுகளை தொடர்ந்து தற்போது கர்நாடக மின்சாரத்துறை நியமன தேர்வு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. கல்வித்துறையின் ஊழலும் வெளிவருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய மந்திரியை இந்த அரசு பாதுகாக்கிறது. தற்கொலை செய்து கொண்ட பெலகாவி ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீலின் மனைவி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளாா். மந்திரியாக இருந்த ஈசுவரப்பாவுக்கு எதிரான விசாரணை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலியல் வழக்கிலும் விசாரணை முடிவடையும் முன்னரே அதில் தொடர்புடைய முன்னாள் மந்திரிக்கு நற்சான்றிதழ் வழங்கினர். எங்கள் கட்சியின் நிர்வாகி விஜய் முலுகுந்துக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்பியுள்ளது. அவர் என்னுடன் நெருக்கமாக இருப்பவர். அவருக்கு மட்டுமல்ல, என்னுடன் வியாபார ரீதியாக தொடர்பில் இருக்கும் 70 முதல் 80 பேருக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளனர். எனக்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
சட்டசபை தேர்தல்
இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளேன். சட்டசபை தேர்தல் முடிவடையும் வரை எனக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளேன். பா.ஜனதா மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சொத்துகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தட்டும்.
40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடிக்கு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா கடிதம் எழுதி ஓராண்டு ஆகிறது. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த பா.ஜனதா அரசு பயப்படுவது ஏன்?.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.