நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான கொலீஜியம் அமைப்பு மிகவும் வெளிப்படையானது - சுப்ரீம் கோர்ட்டு

கொலிஜியம் அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது, அதை சீர்குலைக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

Update: 2022-12-03 07:31 GMT

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது, அதை தடம் புரள விட வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை கூறி உள்ளது.

நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட அமைப்பு கொலீஜியம். இது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையில் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், கொலிஜியம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்களை, (தகவல் அறியும் உரிமை சட்டம்)ஆர்டிஐயின் கீழ் கோரிய மனு விசாரணைக்கு வந்தது.

டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து, தகவல் அறியும் உரிமை சட்டம் -ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவை (எஸ்எல்பி) நீதிபதி எம்.ஆர்.ஷா மற்றும் நீதிபதி சி.டி.ரவிக்குமார் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- டிசம்பர் 12, 2018 அன்று கொலிஜியம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்களை, ஆர்டிஐயின் கீழ் கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஆர்டிஐ அடிப்படை உரிமை என்பதால், தலைமை நீதிபதிக்கும் அரசுக்கும் இடையேயான அனைத்து கடிதப் பரிமாற்றங்களும், தலைமை நீதிபதிகளுக்கு இடையேயான கடிதப் பரிமாற்றங்களும் ஆர்டிஐயின் கீழ் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிபதி எம்.ஆர்.ஷா மற்றும் நீதிபதி சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில், கொலிஜியம் நடைமுறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அதை சிதைக்கவேண்டாம் என்றும் வலியுறுத்தினர்.

கொலீஜியத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ன சொன்னார்களோ அதன் மீது கருத்து சொல்ல விரும்பவில்லை. சுப்ரீம் கோர்ட் மிகவும் வெளிப்படையான நிறுவனங்களில் ஒன்றாகும்.

கொலீஜியத்தின் முந்தைய முடிவுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் கருத்து தெரிவிப்பது தற்போது நாகரீகமாகிவிட்டது, அதேசமயம் கொலீஜியம் மிகவும் வெளிப்படையான நிறுவனம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.இதையடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்