நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

உடுப்பியில் நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-04-09 06:45 GMT

மங்களூரு-

உடுப்பியில் நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

உதவி சப்-இன்ஸ்பெக்டரின் மகன்

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்தவர் குமார் ஷெட்டி. உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் சிராந்த் ஷெட்டி (வயது 20). இவர் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சிராந்த் மங்களூருவில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். அவருடன் கீர்த்தன் தேவடிகா, அக்ஷய் பூஜாரி, ஆல்வின், தரண் மற்றும் ரேயான் ஆகியோரும் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புனித வெள்ளி விடுமுறை என்பதால் சிராந்த் ஷெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் உடுப்பி பைந்தூரில் உள்ள கீர்த்தன் மற்றும் அக்ஷயின் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டனர்.

நீரில் மூழ்கி சாவு

அதன்படி கடந்த 6-ந்தேதி இரவு பைந்தூருக்கு வந்து அவர்கள் 6 பேரும் அக்ஷயின் வீட்டில் தங்கினர். பின்னர் மறுநாள், அதாவது நேற்று முன்தினம் மதியம் கீர்த்தன் வீட்டுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டனர். இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் யத்ரே பகுதியில் கூசல்லி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

சிராந்த் தவிர மற்ற யாருக்கும் நீச்சல் தெரியாது என தெரிகிறது. இதனால் சிராந்த் மட்டும் நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கரையில் இருந்த அவரது நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். ஆனாலும் அந்தப்பகுதியில் வேறு யாரும் இல்லாததால், சிராந்த் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல் மீட்பு

இதையடுத்து உடனடியாக அவரது நண்பர்கள் பைந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பைந்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் நீர்வீழ்ச்சி தடாகத்தில் சிராந்தின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனாலும் நேற்று முன்தினம் அவரது உடல் கிடைக்கவில்லை. 2-வது நாளாக நேற்றும் சிராந்த் உடலை தேடும் பணி நடந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று மதியம் சிராந்தின் உடல் மீட்கப்பட்டது.

பின்னர் போலீசார் சிராந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக சிராந்தின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து பைந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்